குருதிச் சுவடுகள்

அம்மா..என்னை தேடவேண்டாம் - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் 11.04

அம்மா....என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன் - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

வைரவரிகள்


கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார்.


எவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்டுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன் எங்கள் உள்ளங்கள் தான் மலர்ந்து மகிழ்ந்து கொண்டன. ஆம் குமுதன் அண்ணாவின் தலைமையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டோம். அதில் செங்கதிரும் ஒருத்தியாய்……..


வழமைபோல் பயிற்சிகள் ஆரம்பமாகின, பெருங்கடலில், சிறுங்கடலில், சேற்று நிலத்தில், மணல்பிரதேசத்தில், காட்டில், வெட்டைவெளியில், கட்டடத்தில், தடைகளில் என பாரம் தூக்கியபடியான பயிற்சிகள் இரவு பகலாய் ஓய்வு உறக்கமின்றி உண்பதற்கே நேரம் இன்றி கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய் எம் உருவங்கள் இருந்தன. செம்பகத்தின் கண்கள் போல் எம் கண்கள் சிவந்து கிடந்தன, எனினும் பயிற்சி தொடர்ந்தது. இப்படித்தான் எதிரியின் இலக்கு மீது சாக வேண்டும் என்பதற்காய் இவர்கள் பயிற்சியில் கூட தம்மைச் சாகடித்துக் கொண்டிருந்தார்கள்.


எமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும், நீர்க்காப்பிடப்பட்டுத் தயார்படுத்தல்களோடு எஞ்சி நின்ற தோழிகளிடமும், பயிற்சி ஆசிரியர்கள், அங்கிருந்த முகாம் போராளிகளிடமும் விடைபெற்றோம்.


எமக்கான நகர்வுப் பாதைகளையும் தாக்குதல் வியூகத்தினையும் தாக்குதலுக்கான முடிவுகளையும் தளபதி தெளிவு படுத்தினார். இரவு உணவை மாலையே உண்டு, படங்கள் எடுத்து அவர்கள் விழிகசிந்து நிற்க நாம் கையசைத்து மீண்டும் விடை பெற்றோம். சிலருக்கு அதுவே இறுதி விடைபெறலாகவும் இருந்தது.


30.01.1998 மாலை 6.45க்கு பற்றைகள், அருவிகள் கடந்து, வெளிகள் வெட்டைகள் தாண்டி, நீரேரிக்கரையை அடைந்தோம். இராணுவ முன்னணிக் காவல் நிலையில் ‘ரீப்’ லைற்றின் ஒளிச் சிதறல்கள் மெல்லிய நீரலையில் பட்டுத் தெறித்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வர்ணஜாலமாய் அது காட்சியளித்தது. ஆனால் அதுவே மனதுக்குள் ஒரு ஆவேசக் கனலையும் மூட்டிக் கொண்டிருந்தது.


எம்மக்கள் தங்க இடமின்றி அகதியாய் தெருவெங்கும் குப்பி விளக்கே இன்றி அலைந்து திரிகையில் இவனோ எமது மண்ணில் திருவிழா நடைபெறும் கோயில்கள் போலல்லவா? இருக்கின்றான். நீரேரியால் நகர்ந்தோம். பாரப்பைகளை அணைத்தபடி சில இடங்களில் மார்பளவு நீரும், சில இடங்களில் கால் அளவு நீருமாகவே இருந்தது. இவற்றுக்கு ஏற்றால்போல் எம்மை எமது உருவை மறைத்தபடி நகரவேண்டி இருந்தது. எமது அணிக்கு முன்பாக ஆசா அக்காவின் அணி இயக்கச்சிப் பகுதியில் இருந்த ஆட்லறிகளை தகர்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தது.


முன்னணிக் காவல் நிலையின் கம்பி றோல்த் தடையைத்தாண்டி, காப்பரனையும் மறைப்பு வேலியையும் தாண்டி மீண்டும் இராணுவ வலயத்தின் உள்ளேயே கடல் நீரேரியால் நடந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தரையில் நீர் வடியும் வரையும் நின்றோம். அப்போது மங்கை அக்கா என்னிடம் அறிவுக் குமரண்ண்ண நாங்கள் வரேக்க “பொயின்ற்றில்” இருந்து டோச் அடித்துப் பார்த்தானே அதாலே ஏதும் பிரச்ச்சினை வராதோ எனக்கேட்டார்.


சாதாரண போராளியான என்னிடம் அவர் கேட்டதற்கு நான் வேவுக்காரர் சொன்னபடியே அவன் இப்படித்தான் நெடுகவும் அடிப்பான். ஆனால் பயத்தில ஒண்டுமே செய்யமாட்டான் என்று சொன்னதையே சொன்னேன். பின் வெளிகள் ஊடாகவும் மணற்பாங்கான தரைத்தோற்றத்தின் ஊடாகவும் தடயம் இன்றி நகர்ந்து வீதி ஒன்றைக் கடந்து ஓரிடத்தில் தங்கி, உடனே எமது நீர்க்காப்பிடப்பட்ட ஆயுத வெடிபொருட்களை வெளியில் எடுத்து எம்மை தயார் செய்து கொண்டோம். 


பின் தடயப் பொருட்களையும், நனைந்த உடைகளையும் மறைத்துக் கொண்டு இரவு 12.40 க்கு தூங்கினோம். பின் அதிகாலை 4.10க்கு எழுந்து அதிக முட்பற்றைகள் நிறைந்த இறுசல் காட்டுக்குள் நுழைந்து முக்கோண நிலை எடுத்துத் தங்கினோம்.


கரும்புலி கப்டன் குமரேஸ் எப்போதும் பம்பல் அடித்தபடி எல்லோருடைய பழ ரின்னையும் வெட்டி வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். கரும்புலி கப்டன் செங்கதிர் ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டதால் அவளின் கண்கள் தவளையின் கண்போல வீங்கிக்கிடந்தது. அன்று தான் எல்லோருக்குமே நல்ல ஓய்வு கிடைத்தது. ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டாச்சு இனிச் செத்தாலும் பரவாயில்லை என்று சொன்னபோது அவளின் மெல்லிய உதடுகள் உதிர்த்த அந்த புன்சிரிப்பை எப்படித்தான் மறக்க முடியும். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா அடிக்கடி அருகில் இருந்த மரத்தில் ஏறி எமது இலக்கு அமைந்திருக்கும் அந்த ஆனையிறவுத் தளத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.


கரும்புலி கப்டன் செங்கதிர் நாம் கேட்காமலே (குமுதன், குமரேஸ், நான்) சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒன்பது வயதில என்ற ஆசை அண்ணாவைக் கண்டாப்பிறகு காணவே இல்லை என்றபோது அவளின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. இயக்கத்துக்கு வந்தாப்பிறகு “அம்மா அப்பாவைக் கூடக் காணேல்ல” அது தான் எனக்குக் கவலை. மற்றும்படி இந்த மண்ணுக்காக என்னைத் தியாகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வுதான். இதை நாங்களும் பெரும் வேதனையோடுதான் கேட்டுக் கொண்டிருந்தோம்.


இருவர் நீர் எடுக்கச் சென்ற போது இராணுவத்தினர் வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்தார்களாம். நல்லவேளை அவன் இவர்களைக் காணவில்லை. ஆசா அக்காவின் ரீம் எம்மில் இருந்து 75 மீற்றரில் தான் தங்கி இருந்தது. மதிய உணவை எல்லோரும் உண்டோம். தடயப் பொருட்களை பாரப் பையினுள் திணித்து நானும் சுபேசன் அண்ணாவும் குமரேசும், இன்னும் ஓர் போராளியும் முற் பற்றைகளின் ஊடாக இழுத்துச் சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த வெடிச்சத்தம் எங்களை தங்கியிருந்த இடத்துக்கு வேகமாக ஓடவைத்தது – ஓடினோம். அங்கு போய்ப் பார்த்தபோது போராளி ஒருவரின் “ஜக்கட்” தவறுதலாக வெடித்து இருந்தது. முற்பற்றைகளும் மரக்கிளைகளும் துகழாகிக் கிடந்தது.


நல்ல வேளையாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. வெடிக்கும் போது நேரம் 4.40 இருக்கும். பின்னர் உடனேயே எமது நிலைகளை மாற்றி நகர ஆரம்பித்தோம். அது மிகவும் இறுசலான முட்பற்றைகள் நிறைந்த காடானபடியால் நகருவது மிகவும் கடினமானதாகவே இருந்தது. நகரும் திசை மாறி அதைத் தவறவிட்டபடியால் சங்கத்தார் வயலின் அருகில் இருந்த முகாமை அடைந்துவிட்டோம். அங்கிருந்து மெயின் முகாமுக் ‘ரெலிபோன்’ லைன் செல்லும் பாதையினைத் தொடர்ந்து நகர்ந்து ஓரிடத்தில் நீர் குடித்துக்கொண்டிருந்தபோது. கரும்புலி மேஜர் ஆசா அக்காவின் குழுவும் அவ்விடத்துக்கே வந்து சேர்ந்தது. எல்லோரும் எல்லோரிடமும் விடைபெற முன்னர். 


கரும்புலி கப்டன் உமையாள் என்னிடம் அண்ணா மில்லர் அண்ணாட்ட என்னத்தில போறிங்கள் எனக் கேட்டதற்கு நானோ கிபிரில தான் போக வேண்டும் என்று சொன்னேன் ஆனால் அவளோ அதைவிடவும் வேகமாய் போயேவிட்டாள். எல்லோருமே கட்டாயம் திரும்பி வாங்கோ, காயப்பட்டால் எல்லாம் ‘சாச்’ இழுத்துப் போடா தேயுங்கோ – என அதியுயர் பாசத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கரும்புலி மேஜர் மங்கையக்கா இலக்கை அழிச்சா கட்டாயம் திரும்பி வருவேன் என்று சொல்லிப் போட்டுப் போனவ தான். 


பின்னர் அவா வரவில்லையே என அறிந்தபோது இலக்கு அழிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். இப்படித்தான் எல்லோருமே எல்லோரிடமும் மனமின்றி விடைபெற்றோம்.


31.01.1998 இரவு 7.50 தங்கித்தங்கி, மெல்ல மெல்ல அவதானித்தபடி L.P காரனின் கண்ணில் படாமல் நகர்ந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தங்கி பழ ரின் சாப்பிட்டபோது குமுதன் அண்ணா ஏசியபடியால் குமரேஸ் வேண்டாம் என்றே இருந்தான் பின்னர் மெதுவாக எனக்கு வயிறு ஏலாமக் கிடக்கு ஆமிக்காம்ப்பில சோடா குடிச்சாத்தான் சரிவரும் என்று சொல்லி முடித்தான்.


கண்டிவீதியை கடப்பதற்காய் அதில் இருக்கும் காவல் நிலையில் எதிரியின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காய் வீதியில் இருந்து 30 மீற்றரில் தங்கியிருந்தோம். எம்மால் அதில் இருக்க முடியவில்லை. எதிரியின் மலநாற்றம் மூக்கைத்துளையிட உமிழ் நீர் வாயை முட்டியிருந்தது. துப்பினால் எதிரிக்கு கேட்டுவிடும் என்பதால் துப்பாமலே இருக்க வேண்டியிருந்தது. பின் கண்டி வீதியை எதிரியின் காவல் அரணுக்கு அருகினாலேயே பரவல் வரிசையில் நகர்ந்து கடந்து முற்பற்றைகள், வெளிகள் நீர் நிலைகள், சேற்று நிலங்கள் தாண்டி எதிரியின் “சாச்சர் லைற்றின்” பார்வையில் எம்மை அடிக்கடி மறைத்தும் நகர்ந்து புகையிரத வீதியையும் கடந்து நகர்ந்து கொண்டிருந்தோம். காவல் அரண்கள், அடுத்துள்ள பயிற்சி மைதானம், மண் அணை, வெட்டை வெளிகள் தாண்டி இறுதியாய் தங்குமிடத்தில் 12.30 மணிவரை தங்கினோம்.


கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோருக்கும் குளுக்கோஸ் தந்தார். கரும்புலி லெப் . கேணல் சுபேசன் அண்ணா தான் குடித்த மீதி நீரை எனக்கு இறுதியாய் தந்தார். தண்ணீர்க் கான்களை அதிலேயே போட்டு விட்டு நகர்ந்தோம். அது பால்போன்ற நிலவு வெட்டை. எந்த இருட்டிலும் வானவிளிம்பு தெரியும் . அதைவிட கிளாலிப் பக்கமும் , வாடியடிப்பக்கமும், உல்லாச விடுதிப்பக்கமும் என எப்பக்கமும் எரிந்து கொண்டிருக்கும் ரீப் லைற்றினதும் “போக்கஸ்” லைற்றினதும் ஒளிகள் பாம்பு ஊர்ந்தாலே காட்டிக் கொடுத்துவிடும். அப்படியான உப்பள வெட்டை அது, மெல்லென அதனூடாக ஊர்ந்து ஊர்ந்தும் இருந்தபடியும் நகர்ந்து சுமார் 450 மீற்றர் தூரம் நகர்ந்திருந்திருப்போம். நாம் உள் நுழையும் காவல் நிலைக்கு முன்னால் நேர் எதிரே 65 மீற்றரில் நிலை எடுத்து எம்மையும், வெடிமருந்துகளையும், இறுதியாய் தயார் செய்து கொண்டோம்.


ஓர் போராளியும் நானும் காப்புச் சூட்டுக்கு தயாராகும் போது லெப் .கேணல் சுபேசன் அண்ணாவும் கண்ணாளனும் கம்பிறோல்த் தடையைத் தகர்ப்பதற்காய் டோபிடோவுடன் போனபோதுதான். வானவேடிக்கையையும் மிஞ்சியதாய் ஆசா அக்காக்கள் சென்ற முகாமின் பக்கம் வெடியதிர்வுகள் கேட்ட வண்ணமே இருந்தது. அதில் மேஜர் ஜெயராணி, கப்டன் உமையாள், கப்டன் தனா, கப்டன் நளா, கப்டன் இந்து, மேஜர் மங்கை, மேஜர் ஆசா ஆகியோர் உடல் கரைத்து தேச விடிவுக்காய் தம் தேகத்தை உப்பளக்காற்றோடு கரைந்தனர்.


டோபிடோவின் ஒளிச்சிதறலோடு சேர்ந்து கம்பிறோலும் மேலே எழுந்து கொண்டது. உடனே நாம் எல்லோரும் முதலாவது தடையினூடாகச் சென்று இரண்டாவது தடையை கட்டரினால் வெட்டும் போது, இடது பக்க காவல் நிலையில் இருந்து வந்த எதிரியின் சூடுகள் எம்மைக் காயப்படுத்திக்கொண்டே இருந்தது .எனது பக்கக் காவலரண் என்றபடியால் எனது RPK LMG அச்சூட்டை முற்றாக இல்லாது செய்துவிட.


கரும்புலி மேஜர் குமுதன் அண்ணாவுக்கு வலது கை முற்றாக முறிந்தே இருந்தது. அவரின் தொலைத்தொடர்பு சாதனம் நொறுங்கி விட்டது. கரும்புலி கப்டன் குமரேசிற்கு வலது கால் முற்றாக உடைந்த நிலையில் தடையுக்குள்ளேயே கிடந்தான். கரும்புலி கப்டன் செங்கதிருக்கு இடது கையிலும் வலது பாதத்திலும் காயம். மேலும் ஐந்து பேருக்கு சிறிய காயங்கள். எனக்கு வலது கால் மூட்டிலும் இடது காலின் முன்பகுதியிலும் ரவைகள் துளைத்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. “எல்லோரும் இதால வாங்கோ” என்ற குமுதன் அண்ணாவின் குரலோடு அவரோடு எல்லோருமே மிக வேகமாய் உள் நுழைந்து கொண்டிருந்தோம். காயத்தின் வேதனைகள் ஒன்றுமே எமக்குத் தெரியவே இல்லை.


ஆட்லறி நிலைப்படுத்தும் பகுதி வெறுமையாய் கிடந்தது. எங்கள் உள்ளத்திலும் ஒரு வித வெறுமை குடிகொள்ள லெப் .கேணல் சுபேசன் அண்ணாவின் 40mm செல்லும் எனது கவசத்துளைப்பு ரவையும் இடது புறத்தால் மாடிக்கட்டடத்தையும் தகரக் கொட்டகையையும் கிளியர் பண்ணிக் கொண்டிருக்கும் போது வலது புறமாய் இருந்து வந்த சூட்டினை நோக்கி சுட்டுக்கொண்டே போன சுபேசன் அண்ணரின் தொடர்பு மட்டுமல்ல அவரின் சுவாசமும் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நின்றே போனது. அதுவரையும் குண்டு அடி ரவையடி அங்கால அடி இஞ்சால அடி என்று கட்டளையாய் வந்த அவரின் குரல் கணீர் என்று நின்றே போனது .



தொடர்சி ...



Leave A Comment