தாய் தமிழ்நாடு உறவுகளுக்கு தலைவர் அவர்கள் எழுதிய கடிதம் 28.12.1995
தாய் தமிழ்நாடு உறவுகளுக்கு
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கடிதம்.
தலைமைச் செயலகம் தமிழீழம்
28. 12. 1995
சிங்கள இனவாத ஆட்சியாளரின் கொடுமையால், இன அழிப்பின் விளிம்பில் நின்று. விடுதலைக்காகப் போராடி வரும் ஈழத்தமிழினத்திற்காக உணர்வு பூர்வமாக உரிமைக் குரல் எழுப்பும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எமது மக்களின் சார்பில் அன்பையும், நன்றியையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஈழத்தமிழருக்கு இன்னல் நிகழும் பொழுதெல்லாம் தமிழகத்திலிருந்து எழும். அனுதாப உணர்வலைகள், ஈவிரக்கமற்ற எமது எதிரிக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைவதுடன் நொந்து போயிருக்கும் எமது மக்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது.
அத்துடன் ஈழத்தமிழினம் நிராதரவாகத் தனித்து நிற்கவில்லை என்ற உண்மையையும் உலகத்திற்கு எடுத்து இயம்புகிறது. தமிழீழமக்களின் நீண்ட காலமாக எமது மண்ணில் இனக்கொலை நடந்து வருகிறது.
இந்த நீண்ட நாற்பது ஆண்டு கால இன ஒழிப்பு வரலாற்றில் எமது மொழி, பண்பாடு, கல்வி, எமது பொருளாதார வாழ்வு என்ற ரீதியில் எமது தேசிய வாழ்விற்கு ஆதாரத் தூண்களாக நிற்கும் அனைத்துமே திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு வந்துள்ளன.
சிங்கள இனவாதப்பூதம் எமது தாயக மண்ணைப் படிப்படியாக ஏப்பம் விட்டு வருகிறது. வரலாற்றுப் புகழ்மிக்க எமது நகரங்களையும், பட்டினங்களையும், சிங்கள் ஆயுதப்படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன.
பல இலட்சம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இரத்தம் படிந்த இந்தச் சோக வரலாற்றில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சாவைச் சந்தித்திருக்கிறார்கள்.
இந்தக் கொடூரமான இனக்கொலை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் பூதாகர விரிவாக்கமுமாகவே இன்றைய போர் நிகழ்ந்து வருகிறது,
வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஓரு அப்பட்டமான இனஅழிப்பை எதிர் நோக்கி நிற்கிறது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்து விடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கிறது.
இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இதனைச் சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும் கவலையையும் தருகிறது.
தமிழினஅழிப்பை அடிப்படையாகக் கொண்ட சிங்கள இனவாதத்தின் அடக்கு முறைக்கு எதிராகவே தமிழீழ மக்கள் அன்று தொட்டு இன்று வரை போராடங்களை நடத்தி வருகிறார்கள்.
எமக்கு முந்திய பரம்பரையினர் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகக் காந்தி அடிகளின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அறவழிப் போராட்டங்களை நிகழ்த்தினர்.
அறவழிப்போரின் ஆன்மீகப் பண்பியல்பைச் சிங்கள் இனவாத அரசு உணர்ந்து கொள்ளவில்லை. அதற்கு மதிப்பும் அளிக்கவில்லை. அகிம்சைப் போராட்டங்களை
ஆயுத வன்முறையால் மிருகத்தனமாக நசுக்கியது. அறவழியில், சனநாயக வழியில் தொடுக்கப்பட்ட போராட்டங்கள் ஆயுத வன்முறையால் நசுக்கப்பட்ட நிலையில் இன அழிப்பு மேலும் தீவிரமடைந்தது.
தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத்தவிர வேறு வழியில்லை என்ற இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழரின் ஆயுதப்போராட்டமும் தோற்றம் கண்டது.
தன்னாட்சி உரிமை கோரித் தமிழீழத்தில் தோற்றங் கொண்ட ஆயுதப்போராட்ட வடிவத்தை, 'பயங்கரவாதம்' என்றும் 'பிரிவினைவாதம்' என்றும் சித்தரித்துவிடச் சிங்கள அரசு பகீரத முயற்சி செய்கிறது.
இத்தகைய தவறான கருத்து இந்திய மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் சித்தரிப்பில் எவ்வித உண்மையும் இல்லை. ஈழத்த மிழரின் போராட்ட வடிவத்தைத் திரிபு படுத்தி, கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்விதப் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
நாம் பயங்கரவாதிகளும்' அல்லர், 'பிரிவினை வாதிகளும் அல்லர். அன்றி ஆயுதக் கலாச்சாரத்தை வழிபடும் வன்முறையாளரும் அல்லர்.
நாம் ஒரு இலட்சியத்திற்காக, ஒரு உயரிய குறிக்கோளுக்காகப் போராடுகிறோம். இன அழிவிலிருந்து எமது இனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே நாம் போராடுகிறோம்.
இனக் கொலை வடிவம் எடுத்துள்ள ஆயுத வன்முறைக்கு எதிராகவே நாம் ஆயுதம் ஏந்திப் போராட நீர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
உயிர்வாழும் உரிமைக்காக, உயிரைக் கொடுத்துப் போராட வேண்டிய சிக்கலான, நெருக்கடியான வரலாற்றுச் சூழலை நாம் எதிர் கொண்டு நிற்கிறோம்.
எமது இக்கட்டான நிலைமையை இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள் புரிந்து கொள்ளர்கள் என நம்புகிறோம்.
இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதிலிருந்து மாறி, மாறி ஆட்சிக்கு வத்த சிங்கள்- பௌத்த பேரினவாத அரசுகள் தமிழரை அரவணைத்து வாழ விரும்பாது.
அடிமை கொண்டு ஆள விரும்பியதால் தமிழ்மக்கள் தமது அரசியற் தலை விதியைத் தாமே நிர்ணமித்துக்கொள்ள விரும்பினர்.
ஒரு தேசியக் கட்டமைப்பைக் கொண்ட இனம் என்ற ரீதியில் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். அதுவும், அரச ஒடுக்குமுறையானது இன அழிப்பு வடி வம் எடுத்த ஆபத்தான சூழ்நிலையில் தான் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்காகப் போராடத் துணிந்தார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைவதற்கு முந்திய
காலத்திலேயே தன்னாட்சிப் போராட்டத்திற்கான ஆணையை எமது மக்கள் பழைய அரசியற் தலைமைக்கு ஒப்படைத்தனர்.
எமது மக்களின் இந்த அரசியல் அபிலாசையையே எமது இயக்கம் தனது அரசியல் இலட்சியமாக வரித்துப் போராடி வருகிறது.
தமிழீழத்தில், தன்னாட்சி உரிமை போராட்டம் தோற்றம் கொண்ட வரலாற்றினையும் அதன் நியாயப்பாட்டையும் புரியாதவர்கள் எம்மைப் பிரிவினைவாதிகள் எனக் கற்பிக்க முனைகிறார்கள்.
இன அழிவுப் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திர மனிதர்களாக நிம்மதியாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ விரும்பும் எமது மக்களின் நியாயமான போராட்டத்தைப் பிரிவினைவாதம் எனச் சித்தரிப்பதும், அதைச் சில இந்திய மாநிலப் பிரச்சனைகளுடன் ஒப்பு நோக்கிக் குழப்புவதும் தவறானதாகும்.
எமது மக்களின் தனியரசுக் கோரிக்கைக்கு மாற்று வழியாக ஒரு உருப்படியான சுயாட்சித் திட்டத்தைச் சிங்களத் தேசம் வழங்க முன்வரலாமெனத் தமிழ் மக்கள்
மத்தியில் நிலவிய நம்பிக்கையும் இப்பொழுது இறந்து போய்விட்டது. வரலாற்று ரீதியாக, பல நூற்றாண்டுகளாகத் தமிழர் வாழ்ந்து வரும் பிரதேசத்தைத் தமிழரின் தாயகமாக ஏற்றுக் கொள்ளச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.
இந்த அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காணும் விடயத்தில், காலம் காலமாகத் தமிழினம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. இவ்விவகாரத்தில் ஒப்பந்தங்களைச் செய்வதும், ஒப்பந்தங்களை மீறுவதுந்தான் சிங்களவரிடமிருந்து தமிழர் கண்ட வரலாறு.
இந்திய இலங்கை ஒப்பத்தத்திற்கும் இந்தக்கதிதான் நேர்ந்தது.
தமிழர் தாயகத்தின் தனித்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, தமிழரின் தேசிய வாழ்வைச் சிதறடிப்பதிற்கு சந்திரிகா அரசு புதிய வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து வருகிறது.
சமாதானத்திற்கான போர் என்றும், தமிழரை
விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் உலகத்தின் கண்களில் மண்தூவிவிட்டு எமது வரலாற்றுத் தாயகத்தை ஆக்கிர வருகிறது.
சந்திரிகா அரசின் தீர்வுத் திட்டமும் தமிழர் தாயகத்தின் புவியியற் கட்டமைப்பை மாற்றியமைப்பதையே அடிப்படை அம்சமாகக் கொண்டது.
அன்று தொட்டு இன்று வரை, பண்டார நாயக்கா யுகத்திலிருந்து சந்திரிகாவின் ஆட்சிவரை. சிங்கள இனவாத அரசுகள் அமைதி வழிக்குப் பதிலாக, இராணுவ அடக்குமுறைக் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றன.
முந்திய அரசுகளை விடச் சந்திரிகாவின் அணுகுமுறை வித்தியாசமானது. அவர் மிகவும் சாதுரியமான முறையில் உலகத்தை ஏமாற்றிச் சமாதானத்தின் பெயரால் தமிழின ஒழிப்பைத் திட்டமிட்டு நடத்தி வருகிறார்.
சந்திரிகா அரசுடன் நாம் நடத்திய சமாதானப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.
இராணுவ அழுத்தங்களையும், பொருளாதார நெருக்குதல்களையும் தளர்த்தி, தமிழர் மாநிலத்தில் இயல்பு நிலையையும் சமாதானச் சூழ்நிலையையும் தோற்றுவிப்பதற்குச் சந்திரிகா அரசு மறுத்தது. சர்வதேசக் கண்காணிப்புடன் நிரந்தரமானதொரு போர் நிறுத்தத்தைச் செய்யவும் அரசு தயங்கியது.
பகைமை நிறுத்தம் என்ற தற்காலிக உடன்பாட்டைச் செய்து கொண்டு இராணுவ இயக்கத்தைத்தை வலுப்படுத்துவதிற் கவணம் செலுத்தியது.
யாழ்ப்பாண முற்றுகையைத் தளர்த்தி, போக்குவரத்துப் பாதை ஒன்றைத் திறப்பதற்கு மறுத்தது. சமாதானச் சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக இராணுவ மேலாதிக்க நலனுக்கே முதன்மை கொடுத்தது.
விடுதலைப் புலிகளுடன் நிகழ்த்திய பேச்சு எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை சாதாரண நிர்வாக அதிகாரிகளையே பேச்சுக்கு அனுப்பியது. உயர் மட்ட அரசியற் தலைவர்கள் எவரும் பேச்சுக்களிற் கலந்து கொள்ளவில்லை.
புலிகளுடன் பேச்சுக்களை நடத்திய போது தனது தீர்வுத்திட்ட யோசனைகளை அரசு தெரியப்படுத்தவில்லை.
தமிழர் தாயகத்தை அங்கீகரித்து, ஒரு திண்ணியமாண முழுமையான சுயாட்சித் திட்டத்தை முன்வைத்தால் நாம் அதனைப் பரிசீலனை செய்வதாக கூறியிருந்தும் சத்திரிகா ஆட்சிபீடம் அதனைப் பொருட்படுத்தவில்லை. கைதிகள் பலரை விடுவித்து நாம் நல்லெண்ணத்தைக் காண்பித்தோம்.
ஆனால் சந்திரிகா அரசு தமிழ் மக்களின் சாதாரண வாழ்க்கைப் பிரச்சனை களைக்கூடத் தீர்த்து வைக்க முன்வரவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது சமாதான வழியில் புலிகளுடன் பேசித் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அரசுக்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை என்பதையே நாம் உணரமுடிந்தது.
தமிழரின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க அரசு தயாராக இல்லை என்பதையும் நாம் உணரமுடிந்தது. இப்படியான சூழ்நிலையில் பேச்சுக்கள் அர்த்தமற்றதாக இழுபட்டபொழுது, தாம்
காலக்கெடுக்களைக் கொடுத்து எச்சரித்தும் அரசு அவற்றைப் பொருட்படுத்தவில்லை.
இதனாற் பேச்சு முறிந்தது. பேச்சுக்கள் முறிந்து போவதற்கான புறநிலைகளையும் நிர்ப்பந்தங்களையும் சந்திரிகா அரசு உருவாக்கி விட்டு, புலிகள் மீது பழியைச் சுமத்தியது.
புலிகள் சமாதானப் பாதையை விரும்பவில்லையென உலகத்திற்குப் பொய்களைக் கூறியது. ஆனால் உண்மையில் சந்திரிகா அரசுதான் சமாதானப் பாதையை விரும்பவில்லை.
தமிழரைத் தனது நாட்டுப் பிரசைகள் எனக்கூறிக்கொண்டு, தமிழர் மீது பெரும் படையெடுப்பு ஒன்றைச் சந்திரிகா அரசு தடத்தி வருகிறது.
ஒரே களத்தில் முழுப்படைப் பலத்தையும் குவித்து, தமிழரின் வரலாற்றுப் பெருமை மிக்க யாழ்ப்பாண நகரை ஆக்கிரமித்து அங்கு சிங்களத் தேசியக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது.
இடம்பெயர்த்து ஓடிய ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் கண்ணீர் படிந்த இந்த துன்பியல் நிகழ்வைச் சிங்களதேசம் கொண்டாடிவருகிறது. போரில், தமிழினம் தோற்கடிக்கப்பட்டது போல கொழும்பில் வெற்றி விழாக்கள் நிகழ்கிறது.
தமிழரின் இனவுணர்வை இவ்விதம் புண்படுத்திவரும் சிங்களப் பேரினவாதிகள் தமிழருக்கு நீதி வழங்குவார்கள் என நாம் கருதவில்லை.
நீண்ட காலமாக வீரம் செறிந்த ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி வரும் தமிழினம் சமர்களில் பின்னடைவுகளைக்கண்டு சளைத்துப் போவதில்லை. சாவும், அழிவும், இடம் பெயர்வும், அகதிவாழ்வுமாக பெரும் துன்பப்பளுக்களைச் சுமந்து நின்ற போதும் எமது மக்கள் உறுதி தளரவில்லை.
நாம் விடுதலையில் பற்றுக் கொண்டு, ஒன்று பட்டு உறுதிகொண்டு நிற்கிறோம். இன்றைய பின்னடைவுகளை வெற்றிகளாக மாற்றிவிட நாம் திடசங்கற்பம் பூண்டு நிற்கிறோம்.
இன்று, இரத்தம் வழிந்தோடும் எமது மண், நாளை, ஒரு சுதந்திர பூமியாக மாறும் என்ற அசையாத நம்பிக்கை எமக்குண்டு.
வெளியுலகத்திலிருந்து, உலகத்தமிழினத்திலிருந்து, எமது மூலவேர் ஆழவேரோடியிருக்கும் தமிழகத்திலிருந்து எமது மக்களை அந்நியப்படுத்தி அழித்துவிட எமது எதிரி சதி செய்த போதும்,
தமிழகம் எமது மக்கவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவும், அனுதாபமும் காட்டிவருவது எமக்குப் பெரும் தார்மீகத் தெம்பையும் மனவுறுதியையும் தருகிறது.
தமிழகத்திற் கிளர்ந்த உணர்வெழுச்சியின் வெளிப்பாடாக அண்மையில், திருச்சியில், எமது போராட்டத்திற்கு ஆதரவாக, ஒரு இளைஞன் தனக்குத்தானே தீ மூட்டி எரித்து உயிர்நீத்துக்கொண்ட சம்பவத்தை அறிந்து நாம் மிகவும் கவலையும், வேதனையும் அடைந்தோம்.
அத்த இளைஞனின் தமிழினப்பற்றிற்கும் விடுதலை உணர்விற்கும் நாம் மதிப்பனிக்கும் அதேவேளை, இத்தகைய உயிர்த்தியாகங்கள் அவசியமற்றவை என்பதால் அதனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழீழத்தில் தமிழின அழிப்புப் போரை தொடர்ந்து நடத்தச் சிங்கள இனவாத அரசு வெறிகொண்டு நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழகம் எமக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்,
எமது மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இன்றைய இக்கட்டான நிலையில், ஈழத்தமிழினம் இதனையே தமிழக மக்களிடமிருந்தும், தமிழகத் தலைவர்களிடமிருந்தும் எதிர்பார்த்து நிற்கிறது.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்
Leave A Comment