குருதிச் சுவடுகள்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வைரவரிகள்


கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வைரவரிகள்


சுபேசன் அண்ணாவே!


கடைசியில் கூட அருகில் நின்று


கட்டளை பிறப்பித்து – உங்கள்


கட்டுடலை இறைப்பித்து போனவரே


பொறுமையின் பெறுமதியாய்


எமக்கு என்றும் வழிகாட்டி


நிற்பீர் – கடைசியாய்


நீர் தந்த தண்ணீர்


எமக்கு என்றும் கண்ணீராய்………




திடீர் என பெரிய கட்டடம் ஒன்றில் இருந்து வந்த சரமாரியான சூட்டில் எனது இடது மேல்புறக்கையில் காயமடைந்த நிலையிலும் அக்கட்டடத்தின் சூட்டினை எனது RPK LMGயிலும் கைக்குண்டுகளாலும் நிறுத்தும் போது, (இதில் ஏழு கைக்குண்டுகளைப் பாவித்தேன்)




இரு நண்பர்கள் உடனே அவ்விடத்துக்கு வந்தே விட்டார்கள். எதிரி தனது முகாமுக்குள்ளேயே கத்திக் கத்தி ஓடிக்கொண்டே இருந்தான். இப்போது எந்த எதிர்ப்புமே வரவில்லை. எல்லோரும் சத்தம் வரும் திசைகளை நோக்கிச் சுட்டுக் கொண்டே நின்றார்கள். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோரையும் “விக்ரோ” பண்ணும்படி கூறியதாக யாரோ சொன்ன போது பெரிய ஒரு வேதனையோடும், நெஞ்சு கனக்கும் வேதனையோடும், தொலைத்தொடர்பு பரிவர்த்தனையையும், கட்டளைத் தலைமையையும் குழப்பி திகிலடைய வைத்த அரைகுறை திருப்தியோடு எல்லோரும் பின்வாங்கினார்கள்.


நான் குமுதன் அண்ணரிடம் வந்தேன் அவர் அதிக குருதி வெளியேறியதாலும் மார்பிலும் காயமடைந்ததாலும் அதிகமாக மயக்கமடைந்திருந்தார். அந்த நிலையிலும் “அநியாயமாய்ச் சாகக்கூடாது எல்லோரும் போவோம்” என்று தன்னையும் கொண்டு போகும்படி சொல்ல, அவரை அணைத்தபடி எனது காயத்தின் ரண வேதனையோடு கூட்டி வந்தேன். கொஞ்சத் தூரத்துக்கு நண்பி ஒருவர் உதவி செய்தார். பின் வெடிமருந்துப் பையோடு அவாவும் போய்விட முன்னே மண் அணை அரைகுறையாய் வெட்டப்பட்ட கம்பித்தடையையும் தாண்டி வரும்போது.


கரும்புலி கப்டன் குமரேஸ் “அறிவுக்குமரண்ண என்னையும் கொண்டு போங்கோ காலில்லாட்டியும் இடியனையாவது கொண்டுபோய் இடிப்பன்” என்று அந்த முடியாத வேளையில் கூட சொன்னான். தான் தன்னை இழக்கின்ற போது எதிரியையும் இலக்கையும் அழிக்க வேண்டும் என்ற தவிப்பைப் பாருங்கள். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தவித்திருக்க அவன் எதுவுமே சொல்லவில்லை “சாச்சை” மட்டும் ஓன் (ON) பண்ணினான் . அதனோடு குமரேசின் இறுதியான வார்த்தையையும், அவனின் சிரித்தபடி இருக்கும் இளைய முகத்தையும், ஏன் அவனின் அந்தக் கட்டு உடலைக் கூட எங்களால் இனிக் காணவே முடியாது என்பதை நினைத்த போது நெஞ்சில் ஒரு பெரும் வேதனையும் உறைந்து போனது.




குமரேஸ்!


தம்பி


நீ விடைபெற்றுப் போய்


வெகு நாள் ஆகவில்லை – எனினும்


உடைபட்டுப் போனது – எங்கள்


உள்ளம்தான் – கால் உடைபட்டு


நீ கிடந்த காட்சியை


வெடியோடு நீ கரைந்த பொழுதினை


நினைக்கும் போது


வறண்டு போவது


தேகம் மட்டுமல்ல


கண்களும் தான் ….




குமுதன் அண்ணாவைக் கொண்டு வந்து கொண்டே இருந்தேன். அவர் அடிக்கடி பிடியிலிருந்து நழுவி நழுவி தலையைக் குத்திக் குத்தி விழுந்து கொண்டே இருந்தார். அந்த ஆனையிறவின் கட்டளை மையத்தில் இருந்து 180 மீற்றரில் தன்னால் முழுமையாகவே இயலாது போக மயக்கமடைந்த நிலையிலும் நிதானமாய். 


தனது “சாச்சை” கழற்றி தனது நெஞ்சில் வைக்கும்படி கூறவே எப்படியோ மனதைத் திடப்படுத்தி அதைக் கழற்றி ON செய்யும் போது அதில் இருந்த இயங்கு நிலைத் தடையைக் கூறி அது இயங்காது எனக்கூறியபோது அவர் “என்னால இனி வரேலாது உங்கட சாச்சைக் கழற்றி வையுங்கோ” இதைக் கேட்டதும் நான் உறைந்தே போனேன், என்னோடு இருந்தவருக்கு எனது சாச்சையே வைப்பதா? என்னால் அதைப்பற்றி நினைக்கக் கூட முடியாமல் இருந்தது. அப்படி எண்டால் இரண்டு பேருமே ஒண்டாக் கிடந்து “சாச்” இழுப்பம் என்று வேதனையோடு கூறி முடிக்கும் முன் “அநியாயமாய் நாங்கள் சாகக்கூடாது. கெலிச்சண்டையைப் போல நிறையச் செய்திட்டுத்தான் வீரச்சாவடைய வேண்டும். இஞ்ச நடந்த பிரச்சனையை ஒண்டும் விடாமல் கட்டாயம் போய்ச்சொல்லுங்கோ” என இடைவிடாது சொல்லிச் சொல்லிக் கொண்டான். 


மீண்டும் மீண்டும் அதே போதனையும், அதே கட்டளையும் தான் என்ன செய்வது பெரும் வேதனையோடு எனது உடலோடு இருந்த ‘சாச்சை’ கழற்றி அவர் சொன்னபடியே நெஞ்சில் வைத்து ஒரு பொத்தானை ON பண்ணியபடி எஞ்சியிருந்த அவரின் இடது கையில் மற்றப் பொத்தானைக் கொடுத்த போது. மீண்டும் முன்னர் சொன்ன அதே போதனையும், கட்டளையும் அதனோடு இறுதியாய் தம்பி விமலநாதனிடம் சுகமாக இருக்கச் சொல்லுங்கோ கெதியாய் போங்கோ கெதியாய் போங்கோ….. இது தான் அவர் என்னிடம் மட்டுமல்ல அவர் உதடுகள் சொன்ன இறுதி வார்தையும்.


வோக்கி மட்டுமல்ல என் உள்ளமும் சிதைந்து போன நிலையில் அவரின் வோக்கியையும்”சாச்சின்” பொறித் தொகுதியையும் எடுத்துக் கொண்டு எனது பாதங்கள் தான் நகர்ந்தன. நான் நகரவே இல்லை. இப்போதும் அங்கு தான் என் உயிரே. 05 மீற்றர் தூரம் சென்றிருப்பேன். எதிரி அந்த நீண்ட இடைவெளியில் தன்னை மீண்டும் தயார்படுத்தித் தாக்க தொடங்கினான்.


அப்போது திரும்பிப்பார்த்தபடி போய்க் கொண்டிருக்க எனது சாச்சின் வெடியதிர்வோடு அதன் ஒளிச்சிதறல்களோடு குமுதன் அண்ணாவின் உடலும் செந்துகழாகியது. அம்மாவை விட பாசமாய் எம்மை அரவணைத்த அந்த உயிர் நண்பனை மூன்று களத்திலும் எமக்கு தலைமை தாங்கிய அந்த வீரனை, எனது வாழ்நாளிலே என் மனதைக் கவர்ந்த மாமனிதரை நாம் இழந்து போனோம்.


05 நிமிட நேரக்கணிப்பில் இருந்த குமரேசின் வெடிமருந்துத் தொகுதியோடும் கிளியர் செய்ய முன்னுக்கு வந்த எதிரிகளோடும் சேர்ந்து குமரேசின் உடலும் பெரும் வெளிச்சத்தோடு உப்புக் காற்றில் கரைந்து கலந்து என் மூச்சுக் காற்றோடு கலந்தது.


குமுதன் அண்ணாவே!


என் அம்மாவில் கூட காணாத


உங்கள் அரவணைப்பை


நினைக்க விழிகள் கலங்குதே


மூன்று களத்திலும் நீங்களே


தலைமை ஏற்றீர் -இன்று


எம் மூச்சில் கூட சுவாலை ஏற்றிச்


சென்றீரே……..




இந்த இரண்டு தோழர்களினதும் உடல்கள் சிதறியதைப் பார்த்த என் உள்ளமும் சிதறியதுதான். எனினும் எனது அப்போதைய நிலையை எனது அப்போதைய உணர்வை எப்போதுமே என்னால் எழுத்தில் வடிக்க முடியாது. ஏனெனில். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி ஒன்றாய்ப் பயிற்சி எடுத்து. ஒன்றாய் பல தாக்குதல்களுக்குச் சென்று, ஒன்றாய் எந்த இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு கொண்டு ஒரு கூட்டுப் பறவைகளாய் இருந்த அந்தப் பாச உறவுகள், எம் உயிர்ச் சொந்தங்கள். 


என் கண்முன்னே எனது ‘சாச்’ சாலும் தங்கள் ‘சாச்’ சோடும் வெடித்து இருளோடு இருளாகிப் போனார்கள் அந்த இரும்பு மனிதரின் உள்ள உணர்வை அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை, எந்தக் கரும்புலிகளினால் கூட வார்த்தைக்குள் அடக்க முடியாது. கரும்புலிகளின் தியாகமே அப்படியானது தான். அவர்களின் நினைவைச் சுமந்தபடி என் உள்ளத்தில் ஒருவித புதிய உத்வேகம் உந்தித்தள்ள அந்த ஆனையிறவின் மையத்தால் நகர்ந்து கொண்டிருந்தேன்.


ஒரு சிறிய பற்றைக்குள் முனகல்ச் சத்தம் கேட்கவே அங்கு போய்ப்பார்த்தேன். திகைத்தே போனேன். கரும்புலி கப்டன் செங்கதிர். அண்ணா அவையள் முன்னுக்குப் போய்க் கொண்டிருக்க்கினம் அவள் சொல்லி முடிப்பதற்குள், இதுவரையும் இருவரையுமே காப்பாற்ற முடியாமல் போன வேதனை மேலிட இவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு துடிப்பு. ஒரு புதிய ஆவேசம் என்னில் எழ அவளைத் தூக்கி அவளின் ஒரு கையை என் தோளைப் பிடித்திருக்க எனது வலது கையால் அவளை அணைத்தபடி எனது காயத்தின் வேதனையோடும் அதை வெளிக்காட்டாமல் தாண்டித் தாண்டி அவளைக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். 


எதிரி முதலாவது ‘பரா’ வெளிச்சம் மறையும் முன்னர் மற்றப் பராவையும் அடித்துக் கொண்டிருந்தான். ஆனையிறவே அந்த நடு இரவில் பட்டப் பகலாய்க்கிடக்க கவர் எடுப்பதற்கு எந்த தடயமுமே இல்லாத அந்த வெட்டை வெளியால் நகர்ந்து கொண்டிருந்தோம். மோப்ப நாய்களும் துப்பாக்கி ரவையும், 40mm எறிகணையும் எம்மைத் துரத்திக்கொண்டேயிருந்தது. நாம் சென்றுகொண்டேயிருந்தோம்.


ஒரு இருசல் பற்றைக்கு அருகில் முன்னர் வந்தவர்களைக் கண்டு, பின் அவர்களோடு சேர்ந்து சென்றுகொண்டிருந்தோம். எதிரி துரத்திக்கொண்டேயிருந்தான். காயப்பட்டு அதிக குருதி வெளியேறியதால், செங்கதிர் தண்ணீர் தண்ணீர் என்று கத்திய வண்ணமே வர ஒரு உப்பு நீர் ஓடையில் நீரைக் குடித்ததும் உப்புத் தன்மை எமது காயங்களை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. செங்கதிர் மயக்கம் வரும்போது இருந்துவிடுவாள், பின்னர் படுத்தபடி ‘கொஞ்சநேரம் இருந்துட்டுப்போவம்’ என்பாள். புகையிரத வீதியைக் கடந்து வந்துவிட்டோம். செங்கதிர் படுத்தால் எழும்பவே மாட்டாள், எழுந்து நடக்கும்போது எனது பிடியிலிருந்து நழுவி அடிக்கடி மயங்கி மயங்கி இருந்துவிடுவாள்.




மற்றவர்கள் விடிவதற்கிடையில் கண்டிவீதியைக் கடக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க… எங்களுக்காக நீங்கள் எல்லோரும் நின்று வீணாய்ச் சாகக்கூடாது நீங்கள் போங்கோ, விடிஞ்சாப்பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சிடும் வாறம் என்று சொல்லி எனது ROK LMG யைக் கொடுத்துவிட அவர்களும் ஒரு றைபிளை வைத்துவிட்டுச் சென்றார்கள். மலேரியாக் குளிசை குடித்த மாதிரியான மயக்கம் ஏற்படவே வாயில் குப்பியும், கையில் குண்டுடனும், காயத்தின் வேதனையால் அனுங்கிக்கொண்டு கிடந்தோம்.



01.02.1998 காலை 6.00மணி இருக்கும் செங்கதிர் படுத்திருந்த பூவரச மரத்தடியில் எனது கோல்சரில் கிடந்த கைக் குண்டுகளில் ஒன்றினைச் செங்கதிருக்குக் கொடுத்துவிட்டு மிகுதி நான்கு குண்டுகளையும் இடுப்பில் செருகிவிட்டிருந்தோம். 


அது வெட்டை வெளி உருமறைப்புச் செய்யமுடியாத ஈச்சம் பற்றைகள் நாம் இருந்த இடத்திலிருந்து கண்டி ரோட் 300m றில் இருந்தது. அதன் இரு மருங்கும் 200m இடைவெளியில் காவல் அரண்கள் தெரிந்தன. பகலிலே வீதியைக் கடக்க முடியவே முடியாது. இருண்டபின் தான் அந்த வீதியைக் கடக்க வேண்டும். அதுவரையும் வேதனையைத் தாங்கியபடி சாப்பாடும், நீரும் இன்றி இருக்கவேண்டும். அதைப் பற்றி நினைக்கவே முடியாமல் இருந்தது.


செங்கதிரின் கால்காயத்திற்கு என்னிடமிருந்த ஒரேயொரு குருதித் தடுப்புப் பஞ்சணையைக் கட்டிவிட்டு அவளின் அருகிலே அடிக்கடி ஏற்படும் அரைகுறை மயக்கத்தில் கிடந்தோம்.


கரும்புலி கப்டன் செங்கதிர் குமுதன் அண்ணையாக்கள் பாவம் என அடிக்கடி சொல்லிச் சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவதிலும், கவலைப்படுவதிலும் அவர்களுக்குத்தான் எவ்வளவு திருப்தி பாருங்கள்.


தண்ணீர்த் தாகம் அவளை வாட்டி எடுத்திருக்க வேண்டும். அடிக்கடி தாகத்தால் கத்திக் கொண்டிருந்தாள். மிகுதியாய் கிடந்த குளுக்கோசை அவளின் வாயில் கொட்டும்போது, அண்ணா இதை உமிஞ்சு சாப்பிடக் கூட உமிழ் நீர் இல்லை என அவள் கண்ணீரோடு சொன்ன வார்த்தை என் நெஞ்சை இப்போதும் உறைய வைத்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்.


நேரம் 7.40 மணி எமக்கு வலப்புறமாகக் கேட்ட நாயின் குரையல் சத்தத்தில் தலையை உயர்த்திப் பார்த்த போது எம்மை நோக்கி இராணுவத்தினர் வந்து கொண்டிருக்க, எல்லாமே வெட்டை வெளி ஆனபடியால் குரோலில் கண்டி ரோட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, செங்கத்திர் இதாலையும் வாறாங்கள் எனச் சொல்ல, திரும்பிப்பார்க்க, அதாலையும் வந்துகொண்டிருந்தான். எதுவுமே செய்யமுடியாது. மீண்டும் தங்கியிருந்த பூவரசம் மரத்தடியைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.


எதிரி எம்மை நெருங்கி விட்டான். சுட்டுக்கொண்டே இருக்கின்றான். எங்களின் முன்னால் மண்ணைக் கிளறுகின்றது. அப்போது எங்கள் கைக்குண்டுகள் “சேப்றி” இழுத்துத் தயார் நிலையில் கையில் இருக்க செங்கதிர் வயிற்றுக்குள் குண்டை வைத்துவிட்டாள். நானும் அப்படித்தான். செங்கதிர் எதுவுமே கதைக்கவில்லை. ஆனால், அவளின் கண்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.


எதிரியின் சூடு அவளின் உடலில் துளையிட்ட மாத்திரத்தில் குண்டின் வெடியதிர்வு அவளின் உடலை அப்படியே மல்லாக்காகப் புரட்டிவிட செங்கத்திர் என்னைவிட்டு கண்முன்னாடியே போய்விட்டாள். அதை என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. பின்னர் எதிரியின் சூட்டைக் காணவில்லை செங்கதிர் வெடித்ததைப் பார்த்து பயந்திருப்பான் போலத்தான் இருந்தது.


தங்கை செங்கதிரே!


எங்கு தான் உன்னைக் காண்பதினி ?


வெடித்துச் சிதறிட்ட வேளையில்


உங்கள் ஈகத்தையும்,;,;,


தண்ணீர்த் தாகத்தில்


நீ தவித்த பொழுதினையும்


எண்ணி அழுகின்றேன் – நெஞ்சுக்குள்


விம்மி அழுகின்றேன் மீண்டும்


சந்திப்பேன் மிக விரைவில்………..


உங்கள் ஆசைகளை நிறைவேற்றியபடி



தொடர்சி பகுதி 3...
தொடர்சி பகுதி 1...


Leave A Comment