நெருப்பு மனிதர்கள்

நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் வைரவரிகள்

ஏதோ ஒரு உணர்வு என்னை மேலும் உந்தித் தள்ள சேப்ரி அகற்றப்பட்ட அந்தக் கைக்குண்டோடு தாண்டித் தாண்டிச் சென்றுகொண்டிருந்தேன். எதிரியின் ரவைகளும் 40 mm செல்லும் எனக்கு முன்னால் வெடித்துக் கொண்டிருக்க ஆங்கிலத் திரைப்படக் கதாநாயகனைப் போல எந்தக் காயமும் இன்றிப் போய்க் கொண்டிருந்தேன். அதனை இப்போது என்னால் நினைத்தாலும் என்னால் நம்பமுடிவதில்லை.


200m தூரத்தில் ஒரு சிறிய நீர் நிலை தெரிய அங்கு போய் ஆசை தீருமட்டும் தண்ணீரைக் குடித்தேன். என்னால் குடிக்கமுடியவில்லை, செங்கதிர் தாகத்துடன் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தை வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. 


என் உடல் பலவீனத்தால் சோர்ந்துபோக அந்த “சேப்ரி” அகற்றிய கைக்குண்டை வெடிக்காத மாதிரி சேற்றில் புதைத்துவிட்டு நீரோடு நீராகி பாசியோடு பாசியாக நீந்திச் சென்று எதிரிவரும் திசையின் பக்கமாய் இருந்த சம்புப் புல்லுக்குள் கிடந்தேன். அவ்விடத்திற்கும் ஆமி வந்திட்டான். குளத்தின் உள்ளும் குளத்தினைக் கடந்தும் எதிரியின் சூடுகள் சென்று கொண்டிருக்கின்றது. MI -24 கெலியும் தேடுதல் நடத்துகின்றது. ஆனால் என்னைக் கண்டுபிடிக்க அவைகளால் முடியவில்லை.


எனது இரண்டு கால் காயத்தையும் கைக் காயத்தையும் மீன்கள் குடைந்து குடைந்து பிய்த்துப் பிய்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தது. நான் உடல் ரீதியாய்ச் செத்துக் கொண்டே சொல்ல முடியாத அந்த ரண வேதனையோடு விறைத்துப் போய்க் கிடந்தேன். ஏதோ ஏதோ எல்லாம் செய்தது. ஆனால் அவற்றையும் விட எம் தோழர்ககளும் செங்கதிரும் வெடித்த நினைவும் இறுதியாய்ச் சொன்னவையுமே நினைவை நிறைத்துக் கொண்டிருந்தது. அப்போது வேதனை எல்லாம் எனக்கு வேதனையாய்த் தெரியவில்லை. 


ஆனால் இப்போது அதை நினைத்தால் அதுவே பெரும் வேதனையாய் என்னைக் கொல்லும். இப்படியாகத் தண்ணீருக்குள்ளே மீனோடும், வெளியே மூச்சு விடவும் அமிழ்ந்து அமிழ்ந்து போராடிக் கொண்டேயிருந்தேன். நண்பகல் 12.00 மணிக்கு பிறகுதான் இயக்கிச்சி முகாமிலிருந்து ஆட்லறிகள் ஏவப்பட்டன. சிறீலங்காவின் CTB பஸ்கள் காயப்பட்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேதனைகளோடும் மயக்க நிலையோடும் இருட்டும் வரை விறைத்தபடி தண்ணீருக்குள்ளே ஊறியபடி கிடப்பது என்பதை சாதராண நேரங்களில் நினைத்தால் கூட வேதனையாய்த்தான் இருக்கின்றது.


எனது கண்கள் மட்டுமல்ல அன்றைய வானும் இருண்டு கொண்டிருக்க மெல்ல மெல்ல எழுந்து குப்பியை வாயிலும், குண்டினைக் கையிலும் கொண்டு காலை இழுத்து இழுத்து செங்கதிர் வெடித்த அதே இடத்துக்குப் போனேன். அங்கு செங்கதிரின் கழுத்துத் தகடு மட்டுமே கிடந்தது. அவளின் உடலை எதிரி இழுத்துப் போன தடையம் புற்களில் தெரிந்தன. அதை எடுத்து எனது “பொக்கற்” க்குள் வைத்து விட்டு கண்டி றோட்டை நோக்கி நகர்ந்தேன். என்னில் இருந்து 75m தூரத்தில் 7,8 ஆமிக்காரன் அவதானிப்புக்காய் சென்று கொண்டிருப்பதை கண்டு, உடனே திரும்பி மீண்டும் செங்கதிர் வீரச்சாவடைந்த இடத்தில் தங்கினேன். வானத்திலே நிலவு. என் மனதிலோ இருளோடும் அவளின் நினைவோடும் அதிலே நிலவு மறையும் வரை கிடந்தேன்.


தனிமை என்பதையே உணரமுடியாத தனிமை அது. அவளின் அந்தத் தியாகத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இறுதியாய் சொன்னதைக் கட்டாயம் சொல்ல வேண்டும். இதுவே எனக்குள் இருந்த வெறியாகும். 


இரவு 10.00 மணியிருக்கும் நிலவு மறைய மீண்டும் வானத்துச் சூரியனாய் பரா செல்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க எனது காலை இழுத்து இழுத்து ஒருவாறு கண்டி றோட்டையும் கடந்து கோயில் வயல்பகுதிக் காட்டுக்குள் வந்து விட்டேன், திசை மட்டுமல்ல எந்தப் பாதையும் இல்லாத முற்பற்றைகள் நிறைந்த காடு அது. எந்த வெட்டையையும் காணவில்லை. அங்கொன்று இங்கொன்றாய்த் தெரியும் பனைகளைப் பார்த்து நகர்ந்தால் அதன் அருகிலும் இருசல்காடுகளே, முட்கள் என் பாதங்களை மட்டுமல்ல என் காயங்களையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு உடல்ரீதியாய் சோர்வு ஏற்பட ஓரிடத்தில் படுத்தே விட்டேன்.


02.02.1998 காலை பழைய வயதானவர்களைப் போல தடியை ஊண்டியபடிதான் என்னால் நகர முடிந்தது. பகலில் கூட பற்றைகளின் ஊடாக நகர்வது கடினமாகவே இருந்தது. நகர்ந்து கொண்டு தான் இருந்தேன். சங்கத்தார் வயல்பகுதியில் இருந்த இராணுவ மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். 


இப்போது நான் வந்த பக்கமாக காட்டினைக் கிளியர் செய்ய ஆமிக்காறர் சென்ற தடயம் மட்டும் கண்ணில் தெரிய, நல்ல காலம் என்னை அவனுக்கு தெரியாமல் போன நிம்மதியோடு கிழக்குப் பக்கமாய் முகாமுக்கு சமாந்தரமாய் நகர்ந்து கொண்டிருந்தேன். இடைக்கிடை சப்பாத்துத் தடயங்கள். ஒருவாறு முன்னர் வந்து பாதை தெரியாமல் சென்ற அதே “ரெலிபோன்” வயர் வரும் பாதையை தொடர்ந்து நடந்து முன்னர் முக்கோண நிலை எடுத்த அதே இடத்தில் கிடந்தேன். 


அன்று புதைத்து வைத்து விட்டுப் போன மீதிச் சாப்பாட்டையும் பன்றி கிழறி, ஏதுமற்று எனது வயிற்றைப் போல் சாப்பாட்டுப்பையும் வெறுமையாய் கிடந்தது, தண்ணீர் விடாய் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்க முசுறு எறும்புகள் என் தசைகளில் புகுந்து கடித்துக்கொண்டிருந்தது. அதனைத் தடுக்கக் கூட சக்தியற்றுக் கிடந்தேன். குமுதன் அண்ணா, சுபேசன் அண்ணா, குமரேஸ், செங்கதிர் ஆகியோரோடு இறுதியாய் உண்டு அவர்க்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அதே இடத்தில் அந்த நினைவுகளோடு தனிமையில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.




மாலையாகும் போது மெல்ல மெல்லச் சென்று அன்று சுபேசன் அண்ணாவோடு பாரப்பைகள் மறைத்து வைத்த இடத்தில் மீதிச் சாப்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன். அங்கு அவற்றைக் காணமுடியவில்லை. இருட்டு வந்ததும் விக்னா வீதியையும் கடந்து மீண்டும் வெளிகள், பற்றைகள், வெட்டைகள் ஊடாக நகர்ந்து மின்சாரம் வழங்கும் மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். அங்கிருந்து நட்சத்திரங்களை வைத்து தெற்கு நோக்கி நகர்ந்தேன்.


கடல் நீர் ஏரிக்குள் இறங்கி விட்டேன் 200m சென்றிருப்பேன். கரையில வந்து எங்களின் 120mm எறிகணைகள் வந்து வெடிக்கின்றன.


நீரேரிக்குள் இருந்த பாசிகள் காயத்தை உரசிக்கொண்டிருந்தது, அவற்றுக்குக்கூட என் தசைகளும் குருதியும் தான் தேவைப்பட்டன போலும். நிலவு மறையும் வரை முன்னணி காவல் நிலைகளை அவதானித்தபடி நீருக்குள் கிடந்தேன். முதல் நாள் இரவு தாக்குதல் நடத்தி எமது அணிகள் வெளியேறியபடியால் எதிரி எல்லா நிலையிலும் ரோச் அடித்தபடியே இருந்தான். ஒரு மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை ஒரு இயந்திரப் படகு அவற்றை ‘அலேட்’பண்ணிக் கொண்டிருந்தது. 


எப்படியாவது அவற்றைக் கடந்து வரத்தான் வேண்டும். நிலவு மறையவும் மெல்ல மெல்ல சென்று அந்தப் படகு சென்று மறைந்த பின் காவல் நிலையிலிருந்து 15m வேலியைப் பிரித்து முதலாவது “ரீப் லைட்” லைனையும் கம்பி றோலை கையால் அழுத்தியபடியும் கடந்து இரண்டாவதையும் அப்படியே செய்து (கம்பி றோல் கறல் பிடித்து இருந்தபடியால் அழுத்தும்போது அது இலுகுவாய் அழுத்தப்பட்டது.) மீண்டும் கடல் நீரேரியால் கொம்படிப் பக்கமாய் நீருக்குள் தெரிந்த நிலப்பகுதிக்கு அண்மையில் சென்றபோது “பிறிஸ்ரல்”மணம் மூக்குள் நுழைய அது இராணுவப் பிரதேசம் என்பதை உணர்ந்து மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து உடல் நீரில் கிடந்தபடியால் மேலும் இயலாமற்போக மயக்க நிலையில் மணல் திட்டியில் படுத்துவிட்டேன்.


03.02.1998 காலையில் எதிரியின் காவல் நிலையில் ரீப்லைட் அணையமுன் மூன்றாவது நாளாகவும் வேதனைகளோடும், உள்ளத்திலிருந்த அந்த உறுதியோடும் உப்பு நீர் நிறைந்த வயிற்றோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். 


இரணைமடுவின் மேலதிக நீர் வெளியேற்றும் அந்த ஆற்றுப்படுக்கையை இரண்டு தடவை வெவ்வேறு இடங்களால் கடந்து நடந்து கொண்டேயிருக்கின்றேன், இப்போது எனது காயங்களை மணி இலையானும்,அந்த வெளியின் புற்களுமே சுவைத்துக்கொண்டிருக்க சூரிய வெப்பம் என் மேனியில் பட மேலும் தலைச்சுற்றாகவே இருந்தது. கரம்பைக் காய்களைச் சாப்பிட்டுக்கொண்ருக்கும் போதே, அவை உடனுக்குடன் வாந்தியாய் வெளியில் வந்து கொண்டேயிருக்கும்.




03.02.1998 அன்று முற்பகல் 11.40 மணிக்கு கண்டாவளைக் கிராமத்துக்குள் மெல்ல மெல்ல நுழைந்து கொண்டிருந்தேன். என்னைக் கண்டவுடன் தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டார்கள். இருவர் மட்டுமே அசையாமல் நின்று பார்த்துக் கொண்டே நின்றார்கள்.


 வேதனையிலும் சிரித்தபடி அவர்களிடம் விபரத்தைக் கேட்டபோது ஓடியவர்கள் ஆமிக்காரர் என நினைத்து ஓடுவதாயும், ஆமிக்காரார் என்றால் தடியூண் டியபடி வரமாட்டான் என்பதால் தாங்கள் ஓடவில்லை என்றும் சொல்லிக் கொண்டார்கள். பனையோலை வாளி யில் நீர் குடிக்கத் தந்தார்கள். எனது காயத்துக்கு பொழுத்தீனால் இலையான் மொய்க்காமல் கட்டிவிட்டு, தங்களின் மாட்டு வண்டிலைக் கொண்டு வந்து, அதில் என் காயங்கள் தாக்காத மாதிரி வைக்கோல் நிரப்பிய சாக்கில் என்னைத் தூக்கி ஏற்றிக் கொண்டு வந்தார்கள். 


நாங்கள் ஆழமாக நேசிக்கும் மக்களின் அந்த பங்கும் பணியும் இன்னும் தொடர வேண்டும். இடையில் வேவுப்புலி கப்டன் விடுதலையும் மற்றும் ஓர் போராளியும் என்னை உழவு இயந்திரத்தில் மாற்றி ஏற்றி வந்தார்கள்.


04.02.1998 அன்று சுய நினைவு பெற்று எழுந்தபோது நான் அபையன் மருத்துவ மனையில் மட்டுமல்ல ஈழநாதம் பத்திரிகையில், ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் வீரகாவியமான பதினான்கு கரும்புலிகளில் ஒருவனாய் இருந்தேன். மீண்டும் புதிய போரியல் அனுபவங்களின் ஊடே எதிரியின் இலக்கை நோக்கி என் பாதங்கள்……


– கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் (கருவேங்கை)


விடுதலைப்புலிகள் ( வைகாசி – ஆனி, 2007) இதழிலிருந்து


பகுதி 2...

பகுதி 1...


Leave A Comment