கரும்புலி மேஜர் குமலவன்-22.05.2000

கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும்.


‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் வீரவணக்க நாள் இன்றாகும்.


”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. 


சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான்.


“இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். 


அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின.


பள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். 


உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள்.


கிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்குள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். 


யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள். ஆத்திர வெறியோடு ஊருக்குள் நுழைகின்ற இராணுவம் சில உயிர்களை சுலபமாய் பறித்துச் செல்லும். ஊரே ஒப்பாரி வைக்கும், சோகத்தில் மூழ்கும். பின் வழமைக்குவர மறுபடி அவலம் வரும். 


அன்று பகல் பொழுது மயங்கிவிடும் ஒரு வேளை ஊரெங்கும் பரபரப்பு, பதட்டம். எல்லோரையும் கைதுசெய்து பாலத்தடிக்கு இழுத்து வந்தார்கள். திருதிருவென விழித்து விழிகளில் மருட்சியுடன் வந்தவர்களிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏற்கனவே பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட இருவர் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள்.


அந்த ஜீவன்களின் உயிர் வாழ்வதற்கான துடிப்பும்… அதில் இருந்து தப்புவதற்கு தவித்த தவிப்பும்… மெல்ல மெல்ல உடல் கருக உயிர் பிரிந்ததும் எல்லாரையும் கோபப்பட வைத்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாதவர்களாய் நின்றார்கள். அப்ப இவன் சின்னப் பொடியன்.


சிப்பாய் ஒருவன் வெறி நிறைந்த பார்வையோடு, “இப்படித்தான் ஒங்களிற்கும்” என்றுவிட்டு சிரித்தான். அட்டகாசமாகச் சிரித்தான். இந்த வரிகள்தான் அவன் இதயத்திலும் வானத்திலும் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பிஞ்சுமனம் வருகின்றது. அதனால்தான் அவன் தன் பாசங்களை பிரிந்து மனதைக் கல்லாக்கி கசிகின்ற நினைவுகளோடு புலிகளின் பாசறைக்குள் புகுந்தான்.


குமழவன்… 1980.09.12இல் சிவப்பிரகாசம் கமலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக பழுகாமத்தில் பிறந்தவன். ஒரு அண்ணணும் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் அவனது உடன் பிறந்த உறவுகள். அழகான குடும்பம், வறுமையென்று சொல்வதற்கில்லை. நாட்டின் சூழ்நிலை அவனை போராடத் தூண்டியது.


மட்டக்களப்பு காட்டு பயிற்சிப் பாசறை ஒன்றில் தன் பயிற்சிகளை முடித்த அவன், அடுத்தடுத்து மட்டக்களப்பில் நிகழ்ந்த மூன்று முகாம் தாக்கியழிப்புக்களில் கலந்துகொண்டான். வன்னி நோக்கி தாக்குதல் அணிகள் புறப்பட்டபோது இவனும் அணிகளோடு சேர்ந்து வன்னி வந்தான்.


களங்களில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அவனது கால்கள் வலித்தாலும் அதைவிட சின்ன வயதிலே அவனது மனதில் பதிந்துபோன ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய காயங்கள் அதிகமாக வலித்தன.


வயல் வேலை செய்து குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சித்தப்பா வயலுக்குள்ளேயே செல்லடிக்கு இறந்து போனமை, வீட்டில் விசேட கொண்டாட்டம் என்றால் ஊரிற்கு வெளியே இராணுவமுகாம் தாண்டிச் சென்று சந்தையில் பொருட்கள் வேண்டி வரவேண்டும். அண்ணன்தான் உடுப்புகளும் பொருட்களும் வேண்டுவதற்குப் போவான். 


இந்த நேரங்கள் எல்லாம் பிடித்து விசாரிப்பதும் அடிப்பதுமாக இராணுவம் தந்த வேதனைகள். எந்த நேரமும் நிம்மதி இழந்த பதட்டமும் இருக்கின்ற ஊர், இந்த நினைவுகளே அவனுக்கு பாரமாய் கனத்தன. அதுவே ரணமாய் வலித்தது, அவன் நெஞ்சில் அணையாது தீயாய் எரிந்தது.


வன்னிக்கு வந்ததும் அவன் எண்ணத்தில் இருந்தவற்றை தலைவருக்கு எழுதினான். பதிலுக்காகக் காத்திருக்கும் நாட்களில ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் அணிகளோடு சேர்ந்து சமரிட்டான். எல்.எம்.ஜீ கனரக ஆயுதம்தான் இவனது ஆயுதம். அந்த ஆயுதத்தோடுதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் அதிகமாய் ஈடுபட்டிருக்கிறான்.


ஜெயசிக்குறு எதிர்ச்சமர் களத்தில் ஒருநாள் எதரியின் பெரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை முறியடிப்பதற்காய் ஒவ்வொரு போராளிகளும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் குமழவன் நிலை எடுத்திருந்த புற்றிற்கு அருகாக எறிகணைகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. 


பெரிய மரக்கொப்புகளும் மண்ணும் அவனை முழுமையாக மூடியிருந்தாலும் சில கணநேரம் இயங்க முடியாதுபோன அவனும் அவனது ஆயுதமும் மறுபடியும் இயங்கத் தொங்கின. அந்த இறுக்கம் நிறைந்த களச்சூழலில் அவனின் தளராது உழைப்பும் அன்றைய வெற்றிக்கு வழியமைப்பதாகவே இருந்தது.



ஜெயசிக்குறு களமுனையிலேயே கள அறிக்கையாளனாக அவனது பணி மாற்றப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அவன் இத்தனை நாள் காத்திருந்த கரும்புலி அணிகளுடன் இணைவதற்கான அனுமதி கிடைத்தது.


சின்ன வயதில் இருந்தே நெஞ்சிற்குள் ஆழப்பதிந்துபோன சோகங்களிற்கும் அவலங்களிற்கும் முடிவு காணுவதற்காய் அயராது உழைத்தவன் 20.05.2000 அன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர் வெற்றிக்காய் கோப்பாய் மண்ணிலே வீரகாவியமானான்.


”இயக்கத்திற்குப போனா திரும்பி வரமாட்டன். ரங்கண்ணா மாதிரி கரும்புலியாத்தான் வெடிப்பன்”. சிறுவயதில் அவன் உரைத்த வரிகள் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.


வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ்  (மார்கழி 2004 – தை 2005)




தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment