வரலாற்று சுவடுகள்

யாழ் நூலக எரிப்பு 31.05.1981

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு 

31.05.1981


“ஆயிரக்கணக்கான வரலாற்று இதிகாசங்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். மிகவும் கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்டிருந்தது யாழ் நூலகம். நாங்கள் எங்களுக்குத் தேவையான நூல்களை பலகலைக் கழக நூலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட போதும் அதை விட மேலதிகமான தேவைகளுக்கு யாழ் போது நூலகத்தையே நாடினோம். 


உலகில் எங்கும் கிடைத்திராத நூல்களும், இந்தியாவில் கூட கிடைத்திராத பல நூல்கள் ஆவணங்களும் பாதுகாப்பாக அங்கு இருந்தன. இனி அந்த நூல்களை எந்த விலை கொடுத்தாலும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. புராண வரலாற்று தொல்லியல் சான்றுகளை எரித்து அழித்ததற்கு நிகர் இது.”


யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் இப்படி கூறுகிறார்.


“காலனித்துவகாலத்து நூல்களும், யாழ்ப்பாணத்தின் கல்வி மறுமலர்ச்சி சம்பந்தப்பட்ட மூல ஆவணங்களும், ஈழத்து தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் எங்கும் கிடைத்திராத நூல்களும் கூட இங்கு சேகரிக்கப்பட்டிருந்தன.”


இலங்கையின் அரச பயங்கரவாதம் காலத்துக்கு காலம் கலவரங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை கொடுத்து வந்திருக்கிறது தான். இதற்கு முந்திய 1939, 1956, 1958, 1977 முக்கிய கலவரங்களின் போதும் அழிவுகளை ஒவ்வொரு கோணத்தில் கண்ணுற்றிருக்கிறோம் ஆனால் 1981 இல் அழித்தவற்றில் தலையாய இழப்பாக, மறக்கவும், மன்னிக்கவும் முடியாத இழப்பாக பதிவானது யாழ் நூலக அழிப்பு.


தென்னாசியாவின் சிறந்த நூலகமாகவும், இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகவும் அறியப்பட்டது அது.


கணேசலிங்கத்தின் வாக்குமூலம் யாழ் நூலக எரிப்புக்கு காரணமான எவரும் இறுதிவரை உத்தியோகபூர்வமாக தண்டிக்கப்படவில்லை. அவர்கள் எவரும் சட்ட ரீதியாக குற்றம் சுமத்தப்படவுமில்லை. ஆனால் 1993 மார்ச் மாதம் அப்போது வெளிவந்த சரிநிகர் பத்திரிகைக்கு ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இனப்பிரச்சினை குறித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் அவர் அன்றைய கொழும்பு மேயரும், ஐ.தே.க.வின் பொருளாளருமாக இருந்த கே.கணேசலிங்கத்துடன் ஒரு உயர்ஸ்தானிகரின் வீட்டு விருந்தொன்றில் பரிமாறிக்கொண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.


 “அங்கு மது பரிமாறப்பட்டிருந்தது “க” போதை நிலையில் இருந்தார். 1981 யாழ் நூலக தீவைப்புக்கு நீங்களும் மெத்தியு போன்றோருக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்களே:"


என்று கேட்ட கேள்விக்கு.


 கணேசலிங்கம்: “அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதகாகத் தான் நாங்கள் போயிருந்தோம் என்பது உண்மை.... நானோ, சிறில் மெத்தியுவோ, காமிநியோ பெஸ்ரல் பெறேராவோ காரணமல்ல. அதைச் செய்தது பொலிஸ் அதிகாரி ஹெக்டர் குணவர்த்தன தான். 


நாங்கள் அதைத் தடுக்கவில்லை.” ஐவன்: 83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா? கணேசலிங்கம்: “1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்லஅரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்.. தமக்கு தேவையானதை செய்துகொண்டார்கள். 


காமினி, லலித், மெத்தியு, பிரேமதாச அனைவரும் பாவித்தார்கள். நாங்கள் எவரும் யோசிக்கவில்லை அது அவ்வளவு சிக்கலைக் கொண்டு வரும் என்று. சாதாரணக் கலவரத்தைப் போல எழும்பி அடங்கி விடுமென்றே கருதியிருந்தோம்” ஐவன்: “இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்ய தமிழனான நீங்கம் எப்படி உடந்தையாக இருந்தீர்கள்.”


பிரேமதாச அரசாங்கத்தின் போது காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி பிரேமதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது பிரேமதாச இந்த உண்மைகளை உடைத்தார். காமினி திசாநாயக்க நூலக எரிப்பில் ஆற்றிய பாத்திரத்தைப் பற்றிய உண்மைகளை அன்றைய ஜனாதிபதி பிரேமதாச மறைமுகமாக வெளிப்படுத்தினார்.


புத்தளம் முஸ்லிம் கல்லூரியில் பிரேமதாச ஆற்றிய உரையின் போது;


“1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடைபெற்ற வேளையில் கட்சிக்காரர்கள் நாட்டின் பிர பகுதிகளிலிருந்து பலபேரைச் சேர்த்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். வடக்கில் நடைபெற்ற தேர்தலை நடக்க விடாமல் குழப்பியதோடு குழப்பமும் செய்தார்கள். யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் விலைமதிப்பற்ற புத்தகங்களைக் கொளுத்தியவர்கள் யாரென்று அறிய விரும்பினால் எம்மை எதிர்ப்பவர்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும்” என்றார்.


அன்று அவரை எதிர்த்து நின்றவர்கள் வேறு யாருமில்லை காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவே.


 இந்தக் குற்றச்சாட்டுக்கு காமினி பூசி மெழுகி எழுதியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி பிரேமதாச மீண்டும் பதிலளித்தார். அது பற்றிய செய்தி 1991 ஒக்டோபர் 26 ஆண்டு வெளியான ஈழநாடு பத்திரிகையில் செய்தியும் வெளியானது, அதில்


“வடக்கு கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார். இதற்கு பிரதானமான காரணம் திரு.காமினியே பத்து வருடங்களுக்கு முன் 1981ல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளில் இது ஒரு கரை படிந்த துரயரமான சமவமாகும்... மாவட்ட அபிரிவித்து சபை முறையை பாராளுமன்றத்தில் காமினி திசாநாயக்கவே எதிர்த்தார். 


தேர்தலுக்கு முதல் காமினி நிறைய ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார்...


மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களில் சதிநாசவேலைகள் இடம்பெற்றபின்னர் ஒரு சர்வதேச நூல்நிலயமான யாழ் நூல் நிலையமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுக்களால் நீதியை பெறுவதற்கே எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயலில் இறங்கினார்கள்..”


அழிப்பின் சிகரம் கடந்த 2016 டிசம்பர் மாதம் யாழ் நூலக எரிப்புக்கு முதற்தடவையாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பிரதமர் ரணில்.



சிறில் மெத்தியு ஒரு வீரனாகவே இனவாதிகள் மத்தியில் இன்னும் திகழ்கிறார். 1981சம்பவத்தில் சிறில் மெத்தியுவை கண்டும் காணாது இருந்ததன் விளைவு தான் 1983 கலவரத்திலும் மெத்தியு அதனை தனக்கு கிடைத்த லைசன்சாக கருதி ஆடிய ஆட்டம். பிரேமதாசா போன்றோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்னர் அவர் விலத்தப்பட்ட நாடகம் வேறொரு உபகதை. உண்மையில் சிறில் மெத்தியுவை எவரும் விலத்தத் துணியவில்லை அவர் தானாக விலகினார் என்பது தான் உண்மை.



சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் Orville H. Schell, தலைமையில் உண்மையறியும் குழுவொன்று இதனை விசாரிப்பதற்காக 1982இல் சென்றது.


Orville H. Schell சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவராகவும் விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பக்கசார்பில்லாத புலனாய்வுப் பிரிவை நிறுவவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 1981 மே, யூனில் ஏற்பட்ட அழிவிற்கு யார் பொறுப்பாளி என்பதைக் கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


யாழ் நூலகத்தை பின்னர் புனரமைத்து தமிழர்களுக்கு தந்ததாக சிங்கள அரசு கைகழுவிக் கொண்டது. ஆனால் கைநழுவிப் போன தமிழர் நம்பிக்கையை அவர்களால் திருப்பிப் பெற முடியவில்லை. அது அடுத்து வரும் பெரிய இழப்புகளுக்கு முத்தாய்ப்பாக ஆனது. ஒரு போராட்டத்தின் விதையாக ஆனது. தமக்கான தலைவிதியை தீர்மானிக்கும் வித்தானது.


யாழ் நூலக எரிப்பு அடையாள அழிப்பின் சிகரம்.


இந்த அரச பயங்கரவாதச் செயலுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன றோட்டரிக் கழக வைபவத்தில் ஆற்றிய உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.


யாழ் பொது நூலகமே எனது அரசியல் வாழ்வுக்கு அத்திவாரமிட்டது. (11.06.1982 வீரகேசரி செய்தி)


கால வரிசைப்படி யாழ் நூலக வரலாற்றுக் குறிப்பு


1933 - இல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலவச தமிழ் நூலகத்தை திறக்கவேண்டும் என்கிற சிந்தனையில் அன்றைய நீதிமன்ற காரியதரிசியாக பணிபுரிந்த க.மு.செல்லப்பா இளைஞர் முன்னேற்ற சங்கத்திடம் தெரிவித்தார். இளைஞர்களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று நூல்கள் சேகரிக்கப்பட்டன.



11.12.1933


செல்லப்பா நூலகத்தின் அவசியத்தைப் பற்றி “A central Free Tamil Library in Jaffna” என்கிற தலைப்பில் ஒரு அறிக்கை விட்டார். 04.06.1934 யாழ் மத்திய கல்லூரியில் நீதிபதி சீ.குமாரசுவாமி தமைமையில் கூடிய புலமையாளர்கள் மற்றும் அரச உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும் கூடி இதற்கான ஒரு குழுவை நியமித்தார்கள்.


01.08.1934 ​


ஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்தார்கள். பலரும் நின்றுகொண்டு குவிந்திருந்து படிக்கத் தொடங்கினார்கள். பாகிஸ் இடப்பற்றாகுறையினால் பக்கீஸ் பெட்டிகளின் மீதிருந்து படித்தார்கள்.


01.01.1935


நூலகம் உத்தியோகபூர்வமாக கோலாகலமாக யாழ்ப்பாண நகர சபையிடம் கையளிக்கப்பட்டது. 844 தரமான நூல்களுடன் (இவற்றில் 694 நூல்கள் பொதுமக்களால் அன்பளிப்பு செய்யப்பட்டவை) மாநகராட்சி மன்றத்தின் மராமத்துப் பகுதி அமைந்துள்ள பகுதியில் அது இயங்கியது. 1936 மழவராயர் கட்டடத்துக்கு மாறியது. 16.05.1952 “யாழ்ப்பாண மத்திய நூலக சபை” என ஒரு ஆளுநர் சபை உருவாக்கப்பட்டது.


29.05.1954


நகரபிதா வணக்கத்துக்குரிய லோங்பிதா, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செசில் செயேஸ், அமெரிக்க தூதுவர் பிலிப் குறோல், இந்திய உயர்தாநிகராலயத்தில் முதல் காரியதரிசி சித்தாந்தசாரி ஆகிய ஐவரும் சேர்ந்து வீரசிங்கா முனியப்பர் கோயில் முன்னுள்ள முற்ற வெளியில் அடிக்கல் நாட்டினார்கள். ஆசிய அபிவிருத்தி நிதியம் இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட மேலும் பலர் நிதியுதவிகளை வழங்கினர். சிறிது சிறிதாக பலரது உதவிகளும் நூலகத்துக்காக திரட்டப்பட்டன. நிதி சேகரிப்புக்காக களியாட்ட விழாக்களும் நடத்தப்பட்டன.


11.10.1959 ​


நூலகத்தின் இட நெருக்கடி தொடர்ந்தும் இருந்த நிலையில் மேல் மாடி கட்டி முடிக்குமுன்பே கீழ் மண்டபத்தை நகர பிதா அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடத்தினார். பழம்பெரும் நூல்களின் தொகுதிகளை கோப்பாய் வன்னியசிங்கம் மட்டும் பண்டிதர் இராசையனார் நினைவாகவும் கிடைத்தன. முதலியார் குள சபாநாதனிடமிருந்து பல அரிய நூல்கள் விலைக்கு கிடைத்தன. இப்படி பல அரிய ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும், கையெழுத்து மூலப் பிரதிகளும் சேகரிக்கப்பட்டன.


03.11.1967 ​


மேல் தளம் பூர்த்தியாக்கப்பட்டு பின்னர் சிறுவர், பகுதி, அடுக்கு அறை என்பனவும் திறக்கப்பட்டன. 01.06.1981 யாழ் நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்து சாமபலாக்கினர். 97000க்கும் மேற்பட்ட நூல்கள், அரிய ஓலைச் சுவடிகள் அனைத்தும் எரித்துப் பொசுக்கப்பட்டன. பின்னணியில் அரசாங்க அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, சிறில் மெத்தியு. இந்த சம்பவத்தைக் கண்ட வணக்கத்துக்குரிய சிங்கராயர் தாவீது அடிகளார் திகைத்து மாரடைப்பில் மரணமானார். 07.02.1982 புதிதாக திருத்தபோவதாக அடிக்கல் நாட்டல்


10.12.1982 இடைக்கால ஒழுங்காக ஒரு பகுதி திருத்தியமைக்கப்பட்டு வாசிகசாலையின் சிறுவர் பகுதி, உடனுதவும் பகுதியும் இயங்கத் தொடங்கியது. 14.07.1983 இரவல் கொடுக்கும் பகுதி மீள இயங்கத் தொடங்கியது.


10.01.1984 ​


மாநகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு மட்டமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த நூலக உறுப்புரிமை யாழ் மாவட்டத்தினர் அனைவருக்குமாக விஸ்தரிக்கப்பட்டது.


05.06.1984


மீண்டும் திறக்கப்பட்டது.


யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு 31.05.1981


Leave A Comment