மாவீரர்கள்

கடற்கரும்புலி மேஜர் பாலன்-28.06.1997

கடற்கரும்புலி மேஜர் பாலன்

28.06.1997


யப்பான் அடிப்படை பயிற்சிமுகாமில் பயிற்சி நிறைவில் சிறப்புத்தளபதி சூசை அண்ணையின் மெய்ப்பாதுகாப்பு அணிக்காக தெரிவுசெய்யப்பட்ட ஐவரில் பாலனும் ஒருவன்.


இயக்கத்தில் இணையும்போதே கரும்புலியாக தன்னை இந்தப்போராட்டத்தில் அர்ப்பணிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடனேயே இணைந்தவன்.


சூசையண்ணையின் மெய்ப்பாதுகாவலனாக அவரோடு கூடவே இருந்தபோதும்,தனது விருப்பத்தை சூசையண்ணைக்கு அவன் கடிதம் எழுதியே வெளிப்படுத்தினான்.


சூசையண்ணை அதனை மறுத்தபோது பாலன் அழுதேவிட்டான்.


சூசையண்ணை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதம் அவரது மிக நெருக்கமான நண்பரான மேஜர் றஞ்சன் சித்தப்பா அவர்கள் ஏந்திக் களமாடியிருந்த M16 துப்பாக்கி பாலனுக்கே வழங்கப்பட்டிருந்தது.


மிகத்துடிப்புள்ள இளைஞனாக சூசையண்ணையின் நம்பிக்கையைப் பெற்ற போராளியாக அவன் விளங்கினான்.சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினரின் பயிற்சி விடயங்கள் மற்றும் அதுசார்ந்த அனைத்து விடயங்களும் பாலன் ஊடாகவே சூசையண்ணை பேணியிருந்தார். இரகசிய நடவடிக்கைப் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு செல்லும்போது அதிகம் பாலனையே சூசையண்ணை கூட்டிச்செல்வார்.


ஒரு மெய்ப்பாதுகாவலர் போதும் நீங்கள் ஏனைய பணிகளைச் செய்யுங்கள் எனக்கூறிவிட்டு பாலனை மட்டும் அழைப்பார்.


பாலன் வந்தபின்னர் நாம் அவனிடம் பயிற்சிகள்பற்றி விசாரிப்போம்.ஆனால் சூசையண்ணையைவிட அவன் இரகசியம் பாதுகாப்பான் எம்மிடம்.


சூசையண்ணை கோபமாக இருக்கும் நேரங்களில் மெய்ப்பாதுகாவலனாக பாலனையே மாட்டி விடுவோம்.அவரிடம் பேச்சு வாங்குவதிலிருந்து சிலவேளை அடியும் விழும் தருணங்களிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள அதனை பாலன் அனுபவிப்பான்.


வோக்கிக்கு பற்றரி மாற்றவில்லையாயினும்,கோட்சீற்றை மறந்துவிட்டிற்று வந்தாலும்சரி,வல்லைவெளியால போகும்போது கண்ணாடி திறந்து ஹெலியை அவதானிக்கிறதென்டாலும்சரி ஏன் அதிகம்,வாகனத்துக்கு கோன் வேலை செய்யவில்லையெண்டாலும் முன்னுக்கு இருப்பவருக்குத்தான் மூக்குடையும்.


அதனால முன்சீற்றில பாலன் ஏறும்படியாக மிக கவனத்துடன் நடந்துகொள்வோம்.சிலவேளை நான் முன்னால் ஏறிவிட்டால் பின்னுக்கிருந்து வேண்டுமென்றே சூசையண்ணைக்கு கோபம்வரும்படி நடந்துகொள்வார்கள்.

முகாம் வந்ததும் இவற்றைச் சொல்லிச்சொல்லி சிரித்து மகிழ்வோம்.ஆனாலும் திரும்பவும் சூசையண்ணை தயாராகி பஜிரோவுக்கு கிட்டவாக வரும்போது முதல் ஆளாக M16 துப்பாக்கியுடன் பாலன் தயாராக நிற்பான்.


ஒரு மெய்ப்பாதுகாவலனாக களமுனைகளில் எதிரியின் தாக்குதல்களிலிருந்து சூசையண்ணையை பாதுகாக்க உரிமையுடன் அவர் கையைப்பிடித்து இழுத்து பங்கருக்குள் விடுவான்.அதற்காக அவரிடம் அடியும் வாங்குவான்.சூசையண்ணைக்கு மெய்ப்பாதுகாவலனாக மட்டுமல்ல ஒரு தாதியாகவிருந்து பாதுகாத்து பராமரித்தவன் அவன்.


கிளாலிக்கடல்கடந்து வன்னிக்கு செல்லும் நாட்களில் சூசையண்ணையை தூக்கிச்சுமந்து படகேற்றுவான் அவருடைய முழங்கால் காயத்தின் தன்மையையும் வலியையும் உணர்ந்தவன் பாலன்.


பாலனின் இரகசியக் காப்புக்கான தியாகத்துடன் கூடிய வீரமரணமென்பது எமது விடுதலை இயக்கத்தில் புதிய எடுத்துக்காட்டாக போராளிகளுக்கு படிப்பிக்கப்பட்டது.


1992 காலப்பகுதியில் கடற்புலிகளின் புதிய போராளிகளாக மட்டு-அம்பாறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 30 பேர் கொண்ட அணியில் பாலனும் இணைக்கப்பட்டிருந்தான்.


அன்றிலிருந்து அவன் தனது உறவுகளுடனான தொடர்புகள் எதுவுமின்றி தேசப் பணியைத் தொடர்ந்தவன் சூசையண்ணையின் மெய்ப்பாதுகாப்பிலும் கடற்கரும்புலிகளுக்கான பயற்சிகளிலும் அதிகம் ஈடுபட்டு வந்திருந்தான்.


கிழக்கு வினியோக நடவடிக்கைப் பணியில் சிறிதுகாலம் செயற்பட்ட பாலன் செம்மலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி விரைந்த படகில் அனுப்பப்பட்டிருந்தான் அங்கிருந்து திரும்புகையில் கடலில் ஏற்பட்ட திடீர்மோதலில் பாலன் வந்த படகு ஏற்கனவே சேதமடைந்த காரணத்தால் கடலில் மூழ்கியபோது அவன் நீந்திக் கரையேறினான்.

கரையேறியவன் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தான்.


தன் வாய்மூலம் எந்தவித இரகசியமும் வெளிப்படக்கூடாதென்பதை முடிவெடுத்தவன் தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.



மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.


ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில்தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.


நினைத்தும் பார்க்க முடியாத முடிவு அது. “தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.”


அவனுடைய வீரமரணத்தின் பின்னர் சூசையண்ணை சொல்வார் இந்த M16 ஐ பார்க்கிறபோது றஞ்சன் சித்தப்பாவுக்கு பிறகு கப்டன் கற்பகன்,கப்டன் எல்லாளன்,மேஜர் சீனு இப்ப மேஜர் பாலன் ஆகியோருடைய நினைவுகள்தான் எனக்கு அடிக்கடி வந்துபோகிறது என்று.


அவருடைய மனதில் இடம்பிடித்த பாலன் வரலாற்றிலும் தனக்கானதொரு தடத்தைப் பதித்து தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துக் கொண்டான்.


நட்பின் நினைவுகளோடு….வீரவணக்கம்.


புலவர்.

கடற்புலிகள்.


Leave A Comment