பார்வையில்

தமிழீழ விடுதலை வரலாற்றில் யூலை மாதம் ஒரு பார்வை.

தமிழர் வரலாற்றில் யூலை மாதம் நடைபெற்ற வீரம் செறிந்த நடவடிக்கைகள் ஒரு பார்வை

—------------------------

பண்டா- செல்வா ஒப்பந்தம்:

26.07.1957



26.7.1957 அன்று பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் "பண்டா - செல்வா ஒப்பந்தம்" என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

—------------------------


துரோகி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொலை:

27.07.1975


தமிழினத் துரோகி அல்பிரட் துரையப்பா 27.07.1975 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்…

—------------------------

பயங்கரவாதத் தடைச்சட்டம்:

20.07.1979


1979.07.20 அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில்தமிழருக்கெதிராக, மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம்


அமுல்படுத்தப்பட்டது.


—------------------------

மூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு:

14.07.1983


ஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகதலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார். மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டு விட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சக தோழனுக்கு கட்டளையிட்டு, புலிகளின் வீரமரபு ஒன்றிற்கு வித்திட்டு 15.07.1983 அன்று வீரச்சாவடைந்தார்,


—------------------------

திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதல்:

23.07.1983


1983.07.23 அன்று யாழ், திருநெல்வேலியில் வைத்து சிங்களப் படையினரின் இராணுவ வண்டி மீது விடுதலைப் புலிகள்மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் மூத்த தளபதி செல்லக்கிளி அவர்கள் வீரச்சாவடைந்தார்.


—------------------------

கறுப்பு யூலை;

23-29.07.1983



ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக்காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 


1983 யூலை 23ஆம் திகதிதொடக்கம் 29ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன, சிறைகளில் இருந்த 53 தமிழ்க் கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர், 600வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர், இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசுமூடிமறைத்து விட்டது.

—------------------------

முதற்க்கரும்புலிதாக்குதல்:

05.07.1987


விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத் தின் புதிய பரிமாணமாக முதன் முதலாக நெல்லியடியில் அமைந்திருந்த சிறிலங்காபடைமுகாம் மீது கரும்புலிதாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. 05.07.1987இல் கரும்புலி கப்டன் மில்லர் இவ்வீர்சாதனையைப் படைத்து காவியமானார்


—------------------------

ராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை:

29.07.1987



தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர்.

—------------------------

முதல் கடற்கரும்புலித்தாக்குதல்:

10.07.1990


முதன்முதலாக தமிழீழக் கடற்பரப்பில் 10.07.1990 அன்று விடுதலைப்புலிகளால் ஓர் கடற்கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. சிறிலங்காக் கடற்படையின் ‘எடித்தாரா’ கட்டளைக் கப்பலைத் தகர்க்கவென மேற் கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளான மேஜர் காந்த ரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய போராளிகள் காவியமாகினர்.

—------------------------

ஆகாய கடல் வெளிச்சமர்:

10.07.1991



சிறீலங்காவில் இரு தேசங்களுக்கிடையேயான யுத்தம் என உலகநாடு களால் வர்ணிக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச்சமர் (ஆ.க.வெ) 1991.07.10இல் ஆரம்பமானது.


1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். தமிழீழ  விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாழ ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில்  603  மாவீரர்கள்  வீரச்சாவடைந்தனர். 


ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. 


வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.



—------------------------

கிண்ணியடிப் படுகொலை.

12.07.1991



தமது வீடுகளில் தங்கியிருந்த இளைஞர்களை சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். ஆர். பிரேமதாசா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1991.07.12அன்று மேற் கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயலில் 12தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

—------------------------

தமிழீழவிடுதலைப் புலிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது:

05.07.1992



வெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவுவரை ஒர் இராணுவவேலியை அமைக்கும் நோக்கோடு ‘பலவேகம்-2’ என்னும் படைநடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்ட போது 05.07.1992 அன்று சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.


—------------------------

மண்கிண்டி மலை சிங்கள இராணுவ முகாம் அழிப்பு:

25.07.1993


25.07.1993 அன்று இதய பூமி இராணுவ நடவடிக்கை என்று தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இது மிகப் பெரிய வெற்றியை புலிகள் இயக்கத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. இம்முகாமின் வீழ்ச்சி மணலாறு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு ஒரு பலத்த அடியாக விழுந்தது.


—------------------------

இராசவீதிக் குண்டுவீச்சு:

1993.07.27


டி.பி.விஜயதுங்கா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1993.07.27 அன்றுவீதிவழியாகப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது சிறிலங்காவின் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 4பள்ளிச் சிறுவர்கள் உட்பட 6பேர் அவ்விடத்திலேயேகொல்லப்பட்டனர்.

—------------------------

தமிழீழ விடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள்-1′

18.07.1996


தமிழீழ விடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள்-1′ தாக்குதல் மூலம் முல்லை சிங்களப் படை முகாம் 18.07.1996 அன்று தாக்கி அழிக்கப்பட்டு முல்லைப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பற்ற பிரதேசமாக மாற்றப்பட்டது,


—------------------------

கட்டுநாயக்கா தாக்குதல்:

24.07.2001


கட்டுநாயக்கா விமானத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் என்பவற்றின் மீது 24.07.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதல் சிறிலங்கா அரசை இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் ஆட்டம் காணச் செய்தது. 


பலமான பாதுகாப்பு வேலிகளையும், அரண்களையும் ஊடறுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா விமானப் படையின் 22 விமானங்களும், அரசின் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் 6விமானங்களுமாக மொத்தம் 28 விமானங்கள் அழிவையும், சேதத்தை யும் சந்தித்தது. இத்துணிகரத்தாக்குதல் காரணமாக சிறீலங்கா அரசுக்கு 4000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டது.

—------------------------


Leave A Comment