ஓயாத அலைகள் - 01 முல்லைப் பெருஞ்சமர் (பகுதி-2)- 18.07.1996
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர்
ஓயாத அலைகள் - 01
(18.07.1996)
(பகுதி-2)
தாக்குதல்:-
திட்டத்திற்கமைய தமது குறியிலக்குப் பிரதேசங்களினுள் ஊடுருவிய தாக்குதல் அணிகள் 18 ஆம் நாளன்று காலையில் தளத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன. குறிப்பாகக் கடற்கரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. படையினர் 6 ஆவது விஜயபாகு படையணியின் தலைமையகம் அமைந்திருந்த பகுதிக்குள் முடக்கப்பட்டனர். இவ்வாறு முடக்கப்பட்ட படையினர் தமக்கு அண்மையிலுள்ள கடற்கரையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
கடற்புலிகளின் பெரும் எதிர்ச்சமர்:-
இதேசமயம் சிறிலங்காக் கடற்படை தனது உச்சத்திறனைப் பயன்படுத்தி முல்லைப் படைத்தளத்தின் கடற்கரையைச் சென்றடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கடற் புலிகளால் முறியடிக்கப்பட்டன. 15 மணித்தியாலங்களாகச் சிங்களக் கடற்படையின் உச்சப் பலத்தையும் சிங்கள வான்படையின் வான்கலங்களையும் எதிர்கொண்ட வண்ணம் கடற்புலிகள் வீரத்துடன் எதிர்ச்சமர் புரிந்தனர்.
வலுவூட்டலிற்கான தரையிறக்கம்:-
முல்லைத் தளத்தின் கடற்கரையில் ஒரு கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப் போகவே முல்லைத் தளத்திற்குத் தெற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிலாவத்தைப் பிரதேசத்தில் 18 ஆம் நாளன்று மாலையில் ஒரு வான்வழித் தரையிறக்கத்தைச் சிங்களப் படைகள் மேற்கொண்டன. திரிவிட பகர – என்று பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கிபிர் மற்றும் புக்காரா குண்டுவீச்சு வானூர்திகள், MI-24 தாக்குதல் உலங்கூர்திகளின் தாக்குதல் ஆதரவுடன் முதற்கட்டமாக MI-17 உலங்கூர்திகளில் கொண்டுவரப்பட்ட கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர்.
இவ்வாறு தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களைக் கொண்டு பாதுகாப்பான தரையிறக்க வலயம் ஒன்றை உருவாக்கியபின் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொள்வதே படையினர் நோக்கமாக இருந்தது. 18 ஆம் நாளன்று அவர்களின் அந்த நோக்கம் ஈடேறக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான தரையிறக்கம் ஒன்றை எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை 18 ஆம் நாள் இரவே வளைத்துக்கொண்டன.
தளம் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது:-
இதேசமயம் 18 ஆம் நாள் மாலையில் முல்லைத் தளத்தினுள் முடங்கிப் போயிருந்த படையினர் மீது செறிவான நேரடி வன்கலச் சூட்டாதரவுடன் நெருங்கித் தாக்கிய விடுதலைப் புலிகளால் படையினர் அனைவரும் அழிக்கப்பட்டு அன்றிரவே படைத்தளம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ரணவிரு மூழ்கடிக்கப்பட்டது:-
19 ஆம் நாளன்று சிலாவத்தையில் தரையிறங்கிய படையினர் கடல்வழியால் வலுவூட்டப் படுவதற்குக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அன்று மாலை 4.30 மணியளவில் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த சங்காய் 3 வகைப் பீரங்கிப் படகான ரணவிரு கடற்கரும்புலிகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அன்றும் சிங்களப் படைகளிற்கு வான்வழித் தரையிறக்கமே சாத்தியமானது. அதேசமயம் தரையிறங்கிய படையினர் மீதான விடுதலைப் புலிகளின் நெருங்கித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஆரம்பமாகின.
MI-24 சேதமாக்கப்பட்டது:-
20 ஆம் நாளன்றும் கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப்போக சிங்களப் படைகளின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த வான்வழித் தரையிறக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எறிகணை வடிவில் வந்த அந்த ஆபத்து தரையிறக்க வந்த ஒரு MI-17 உலங்கூர்தியைச் சேதமாக்க அன்று வான்வழித் தரையிறக்கமும் சாத்தியமற்றுப் போனது.
புலிகளின் இறுக்கமான முற்றுகைக்குள் தரையிறக்கப்படைகள்:-
21 ஆம் நாளன்று பலத்த முயற்சியின் பின் ஒரு கடல்வழித் தரையிறக்கத்தைச் சிங்களக் கடற்படை மேற்கொண்டது. இவ்வாறு படையினர் தரையிறக்கப்பட்டு வலுவூட்டல் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்தப் படையினரால் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு நகரமுடியவில்லை.
தரையிறக்க முயற்சிகள் பயனற்றுப் போயின:-
22 ஆம் நாளன்றும் தரையிறக்க முயற்சிகள் சாத்தியமாகவில்லையாயினும் சிங்களப் படைகள் தமது தரையிறக்க முயற்சிகளைத் தொடர்ந்தன. 23 ஆம் நாளன்று தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறங்கு கலமொன்று புலிகளின் எறிகணையில் சேதமடைந்தது. அத்துடன் கடற்கரும்புலிகளின் படகொன்று நெருங்கிச் சென்று மோத முன்னர் வெடித்ததால் மற்றொரு தரையிறங்கு கலம் சேதங்களுடன் தப்பித்துக் கொண்டது. இதனால் அன்றும் தரையிறக்கம் சாத்தியமாகவில்லை.
மீட்கவந்த படைகள் பெரும் அவலத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டன:-
25 ஆம் நாளன்று கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமான போதும் புலிகளின் இறுக்கமான முற்றுகையை உடைத்துத் தரையிறங்கிய படைகளால் ஒரு அங்குலமேனும் முன்னகர முடியவில்லை. அத்துடன் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தரையிறங்கிய படைகள் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில் 26 ஆம் நாளன்று தரையிறங்கிய படைகளை மீட்டுச் செல்லவந்த தரையிறங்கு கலம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் சேதங்களுடன் மயிரிழையில் தப்பித்துக் கொண்டது. இந்நிலையில் தரையிறங்கு கலம் மூலம் மிகுந்த இடர்களின் மத்தியில் தரையிறங்கிய படைகள் மீட்கப்பட்டன.
தரையிறங்கிய படைகளைக் களமுனையில் வழிநடாத்திய லெப்.கேணல். பஸ்லி லாபிர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டார். கேணல் லோரன்ஸ் பெர்னாண்டோ காயமடைந்தார். தரையிறங்கிய படையினரில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மீட்பின்போது தப்பித்து ஓடிய படையினர் கடலில் எறிந்த 100 இற்கும் அதிகமான சுடுகலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்:-
தரையிறக்கப்பட்ட படைகள் உட்பட 1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள், அவற்றிற்கான வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழர் தம் பாரம்பரியப் பட்டினமாம் முல்லைப்பட்டினம் மீட்டெடுக்கப்பட்டது.
இந்த வெற்றிக்காக ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து மாவீர்களானார்கள்.
அலைகள் ஓயாது
ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் புதிய பரிணாமத்தைப் பறைசாற்றியது. இந்த வெற்றியினால் புலிகளிற்குச் சாதகமான பல விளைவுகள் ஏற்பட்டன. யாழ். குடாவைச் சிங்களப் படைகள் வன்கவர்ந்தபோது வன்னிக்கு இடம்பெயர்ந்து அல்லற்பட்டு சோர்வுற்றிருந்த மக்கள் இந்த வெற்றியினால் புத்துணர்ச்சி பெற்றனர்.
புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த ஓயாத அலைகள் பின்னர் 02, 03 என ஓங்கியடித்துத் தமிழர்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பலத்தைப் பகைவனிற்கும் அனைத்துலகிற்கும் வெளிக்காட்டியது கடந்த கால வரலாறு.
நமது மண் விடியும் வரை அலைகள் ஓயாது.
தொகுப்பு:- தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையம்.
வெளியீடு : தமிழ்நாதம் (மூலம்: வெள்ளிநாதம்)
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Leave A Comment