லெப். செல்லக்கிளி அம்மான் நினைவினைச் சுமந்து. - 23.07.1983
லெப். செல்லக்கிளி அம்மான் அவர்களின் வீரவணக்க நாள்
23.07.1983
யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் 23.07.1983 அன்று சிறிலங்கா படையினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் அவர்களின் வீரவணக்க நாள் இன்று…
மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மானின் வரலாற்று நினைவு..
லெப்.செல்லக்கிளி அம்மான்
சதாசிவம் செல்வநாயகம் தமிழீழம்(யாழ் மாவட்டம்)
தாய் மடியில் 15.06.1953 மண் மடியில் 23.07.1983
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.
1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.
நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்கு தான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை.
வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.
முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும்.
என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.
எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ்.
பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.
விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான்.
சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.
தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.
செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.
வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.
“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர்.
வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.
நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.
சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை பற்றி ‘ எமக்குத் தெரியவில்லை.
எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.
ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான்.
அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை.
அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது.
விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான்.
Leave A Comment