பார்வையில்

மாவீரர் விதைப்பும் , இறுதி வணக்க நிகழ்வும்.

மாவீரர் விதைப்பும் , 

இறுதி வணக்க நிகழ்வும்- 

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் - 27


நீத்தாரைச் சிறப்பிக்கும் இயல்பு மனிதஇனத்தின் பொதுப்பண்பு. மனிதகுலம் தோன்றிய காலத்திலேயே இறுதிச் சடங்குகளும், கிரியைகளும் ஓரளவு தொடங்கிவிட்டன. காலப்போக்கில் அவை விரிவடைந்து மனித நாகரிகத்தின் முக்கிய பகுதியாக இன்று இடம்பெறுகின்றன. 


நீத்தாரின் உற்றார். உறவுகள் நிறைவேற்றும் கட்டாயச் செய்கடனாகவும் சரம கிரியைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. வாழ்விடம். மதநம்பிக்கை. இனப் பாரம்பரியம், வாழ்க்கைநிலை போன்றவை இவ்விதிமுறைகளின் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. 


அவற் றில் காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. ஆனால் உயிர்பிரிந்த மனித உடலுக்கு காட்டப்படும் அஞ்சலி வணக்கத்தில் மாத்திரம் மாற்றம் ஏற்படவில்லை.


நீத்தார் உடலுக்கு மனிதன் காட்டும் உள மார்ந்த மரியாதையும் சாவிற்குப்பின் மறுவாழ்வும்


தொடர்ச்சியான பிறப்பும் இறப்பும் உண்டு என்ற தளராத நம்பிக்கையும் இறுதிச் சடங்குகளும் சரம கிரியைகளுக்கும் மூலகாரணமாக அமைகின்றன. 


புதைத்தல். எரித்தல் என்ற இருவிதமாக மனித உடல் சிறப்பிக்கப்படுகின்றது. எது முதற் தொடங்கியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இரண்டுமே சமகாலத்தில் தோன்றி யிருக்கலாம். 


புதைத்தல் முறைதான் மிகக்கூடுதலாக உலக மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. புதைத்தல். எரித்தலைவிட வேறுமுறைகளும் கைக்கொள்ளப்பட்டாலும் அவை விதிவிலக்காகவேஉள்ளன.


உலகின் முக்கிய மதங்களில் சாவீட்டிலும் அடக்கம் செய்யும் இடத்திலும் இறந்தவரின் ஆன்ம ஈடேற்றத்திற்கான விசேட பூசைகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்படுகின்றன. இவை மனிதர்களுக்கு ஆன்மா உண்டு என்ற அடிப்படையில் செய்யப் படுகின்றன. 


மனிதன் புதைக்கப்படுவதற்கும் இக்கோட்பாடு காரணமாக அமைகின்றது. உலகின் மிகப்பழைமை வாய்ந்த நாகரிகத்தைக் கொண்டிருக்கும் சீனர்கள் புதைக்கப்பட்ட உடலுக்குமேல் எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கும் அதன் ஆன்மாவுக்கும் இடையில் நேரடித்தொடர்பு இருப்பதாக நம்புகின்றனர். 


இக்கட்டிடத்திற்குச் சேதம் ஏற்பட்டால் அந்த ஆன்மாவுக்குச் சஞ்சலம் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர். சீனர்கள் மண்ணில் தமது சடலங்களைப் புதைத்து அதன்மேல் மிகவும் ஆடம்பரமான நினைவுக் கட்டிடங்களை எழுப்பு கின்றார்கள். செஞ்சீனாவின் தோற்றத்தின்பின் ஆடம் பரத்தைக் குறைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இன்று எரிப்பதற்கும் புதைப்பதற்கும் பிரத்தியேகமான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் தமது புதைநிலங்களை தேவாலயங்களுக்கு அருகாமையில் வைத்திருக்கின்றனர். இட நெருக்கடி காரணமாக தூர இடங்களிலும் புதைக் கின்றனர். 


யூதர்களும். இஸ்லாமியர்களும் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இறந்த அதேநாளில் அல்லது இயன்றளவு வேகமாக முஸ்லிம்கள் தமது சடலங்களை அடக்கம் செய்கின்றனர். 


முஸ்லீம்களின் சடலங்கள் வலதுபக்க உடல் சரித்துக் கீழ்ப் புறமாகவும் முகம் மெக்காவை நோக்கிய திசையிலும் சரித்துக் கிடத்தி அடக்கம் செய்யப்படுகின்றன. கிறிஸ்தவர்கள் முதுகுப்புறம் நிலத்தில் படும்படி அடக்கம் செய்கிறார்கள். 


கிறிஸ்தவமதம் ஆரம்பித்த காலத்தில் சடலத்தின் கால்கள் கீழ்த்திசையைப்பார்த்தபடி இருக்கும் நிலையில் புதைத்தனர். சூரியோதயத்தோடு மீள்பிறப்பு ஆரம்பிக்கும் என்ற அர்த்தத்தில் இவ்வாறு செய்யப்பட்டது.


புத்த மதத்தினர் தமது சடலங்களை ஒரு காலத்தில் புதைத்திருக்கிறார்கள். அப்போது தலையை புத்தர் பிறந்த வடக்குப் பக்கமாக வைத்துப் புதைத்தார்கள். 


ஆபிரிக்கவாழ் பழங்குடி மக்கள் பலர் இறந்த உடலை கருப்பையில் கிடக்கும் சிசுவைப்போல் முழந்தாளை மார்புவரை இழுத்து மடக்கிய பின் புதைக்கின்றனர். பிறப்பும் இறப்பும் தொடர் நிகழ்ச்சிகள் என்ற அரிய தத்துவம் இதனால் உணர்த்தப்படுகின்றது. 


இன்னும் சில பழங்குடி மக்கள் உடல்களை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக்கும் நோக்கில் வெளியில் போட்டுவைக்கின்றனர். தீயை வணங்கும் பார்சி மதத்தினர் அமைதிக்கோபுரம் என்று (TOWEROF SILENCE) அவர்கள் அழைக்கும் உயரமாக கட்டி டத்தில் அதேநோக்கில் தமது சடலங்களை விட்டுச் செல்கின்றனர்.


மனிதவாழ்வு நிலையானதல்ல. ஆனால்மனித உடல்மீது எழுப்பப்படும் நினைவுக் கட்டிடங் களும். உடலை


அடக்குவதற்காக ஒதுக்கப்பட்ட புனித நிலங்களும். இவைபற்றி எழுந்த பன்மொழி இலக்கியங்களும் காலத்தை வென்று நிற்கின்றன. புராதனகால ஏழு அதிசயங்களில் ஆறு அழிந்து விட்டன. 


எஞ்சியது எகிப்தின் கூபூ (KHUFU) மன்னனின் கீசா(GIZA) பிரமிட் கல்லறை மாத்திரமே. பதின்மூன்று ஏக்கர் அடிப்பாகத்தைக் கொண்ட எகிப்தின் கீசா பிரமிட் உலகின் மிகப்பெரிய கற் கட்டிடமாகக் கணிப்பிடப்படுகிறது. இதன் காலம் 5.000 வருடத்திற்கு முந்தியது. எகிப்திற்குப் புகழ்


சேர்க்கும் பிரமிட்டுக்கள் யாவும் கல்லறைகளே.


ஜோர்தான் நாட்டின்பெற்றா (PETRA) நகர்ப்புறத்தி லுள்ள பாறை மலை உச்சியில் குடையப்பட்ட கற்குழிகளில் புரா தன கால உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதை 1812இல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள னர். கிறிஸ்தவமதம் தொடங்கிய காலத்தில் அதற்கு அரச அங்கீ காரம் கிடைக்காத காரணத்தால் மிகவும் மறைவாக கிறிஸ்தவர்கள் தமது சடலங்களைப் புதைத்தனர். 


நிலத்தின் கீழ் மூன்றடி அகலமான சுரங்கப் பாதைகளை வெட்டி. பாதைச் சுவர்களில் குடைந்த பகுதி களில் அவர்கள் சவப்பெட்டிகளை மறைத்துவைத்தனர். சுரங்கப் பாதைகள் கிளைவிட்டு நெடுந் தூரம் சென்றன. படிக்கட்டுக் களை அமைத்தவாறு மென் மேலும் ஆழமான சுரங்கப் பாதை களை அவர்கள் வெட்டினார்கள். 


இந்த அதிசய புதைப்புச் சுரங்கங்கள் 'கற்றகோம்ஸ்' (CATACOMBS) என்று அழைக்கப்படுகின்றன. கிபி 313இல் கிறிஸ்தவத்திற்கு அரச அங்கீகாரம் கிடைத்தாலும் கி.பி 410 வரை சுரங்கப் புதைப்புக்கள்


தொடர்ந்தன. 10ஆம் நூற்றாண்டில் அவற்றின் இருப்பை மக்கள் மறந்துவிட்டார்கள். 16ஆம் நூற்றாண்டில் அவை தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்டன. ரோமாபுரியிலும் பிற ஐரோப்பிய நகரங்களிலும் காணப்படும் கற்றகோம்ஸ் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கணிப்பிடப்படுகின்றன.


உலகம் பூராகவும் இடு நிலங்களும் சுடு காடுகளும் தேசிய உடமையாகவும் வணக்கத் தலங்களாகவும் மதிப்பிடப்படுகின்றன. இறந்த உடல்களுக்குமேல் எழுப்பப்பட்ட கோயில்கள் இந்தியா. தமிழீழம் உட்பட உலகின் பல பாகங்களில் உள்ளன. 


மகாத்மா காந்தி எரிக்கப்பட்ட இடத்தில் வருடாவருடம் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பிறநாட்டு முக்கியஸ்தர்கள் அங்குசென்று வணக்கம் செய்வதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ளனர்.


இங்கிலாந்தின் வெஸ்ற்மினிஸ்ரர் அபே (WEST – MINISTER ABBEY) என்ற பிரமாண்டமான கிறிஸ்தவ தேவாலயத்தின் உட்புறத்தே 3000 வரையிலான கல்லறைகள் இடம்பெறுகின்றன. அரச பரம்பரையினரின் முடிசூட்டுவிழா தொடக்கம் நல்லடக்கம் வரை இத்தேவாலயத்தில் நடைபெறு கின்றன. 


இங்கிலாந்தின் புகழ்பெற்ற அரசினர். அரசுத்தலைவர்கள். விஞ்ஞானிகள். புலவர்கள். படைத் தலைவர்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


போர்வீரர்களுக்கென்று பிரத்தியேகமான இடு நிலங்களை ஒதுக்கி மிகவும் உன்னதமான நிலையில் பராமரிக்கும் வழமை 1860இல் நடந்த உள்நாட்டுப் போரின்பின் அமெரிக்காவில் ஆரம்பமாகியது. 


உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் அமெரிக்கப் போர்வீரர்களின் இடுநிலங்கள் பராமரிப்பதற்குப் பொறுப்பாக ஒரு திணைக்களம் அமெரிக்காவில் இயங்குகிறது. அமெரிக்கப் போர் வீரர்களின் சடலங்கள் அடங்கிய பேழைக்கு செய்யும் மரியாதைகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேழையும் தேசியக்கொடியினால் போர்த்தப்பட்டு. 


பேழைக்கு நான்கு போர்வீரர்கள் என்ற விகிதத்தில் மரியாதைக் காவல் செய்யப்படு கின்றது. இடுகுழியில் இடமுன்பு மிகவும் உணர்வு பூர்வமாகத் தேசியக்கொடி அகற்றப்பட்டு இறந்த வரின் உரித்தாளருக்கு வழங்கப்படுகிறது.


உடலைத் தகனம் செய்யும் மின்சார அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டபின் புதைத்தல் பெரு மளவில் குறைந்துள்ளது. உலகின் முதலாவதுஇந்த அடுப்பு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 1876ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சிறிலங்காத் தலைநகர் கொழும்பிலும் இந்த அடுப்பு இன்று இயங்குகின்றது. 


மேற்குநாடுகள் யாவற் றிலும் கிறெமெற்றோறியம் (CREMATORIUM) என்ற இந்தவசதி காணப்படுகின்றது. புதைப்பதைத் தேசியப் பாரம்பரியமாகக் கொண்ட சீனாவில் வசதி குறைந்த மக்கள் எரிக்கும் அடுப்புக்களைப் பயன் படுத்துகின்றனர். இந்த அடுப்புக்களில் 3000 பரன்கைற் பாகை வெப்பம் ஏற்றப்படுகிறது. ஒரு மணிநேரத்தில் பெட்டியும் உடலும் எரிந்து சாம்ப ராகின்றன. மேற்குலகில் இந்தவகை ளிப்பு பொது வழமையாகிவிட்டாலும் கத்தோலிக்க மதபீடம் தனது மதத்தினருக்கு இதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளது.


தமிழினத்தின் மூத்த குடிகள் இறந் தோரை ஈமத்தாழியில் இட்டுப் புதைத்தனர். ஈமத் தாழிகள் முதுமக்கட்டாழி என்றும் அழைக்கப் படுவதுண்டு. பெரும்பாலான ஈமத்தாழிகள் நெல் பயிரிடப்பட்ட நதியோரங்களில் வாழ்ந்த விவசாயச் சமூகத்தினரின் எச்சமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு. 


ஈமத்தாழி வசதி அற்றவர்கள் மண்ணில் புதைத்ததற்கான சான்றுகளும் கிடைத் துள்ளன. காவேரி. பொன்னையாறு, பாலாறு போன்ற நதியோரங்களில் பெருமளவு ஈமத்தாழிகள் கிடைத் துள்ளன. அடுத்ததாகத் தென்தமிழ் நாட்டின் தாமர பர்ணி, சித்தாறு, வைப்பாறு போன்றவை ஓரமாகவும்


ஈமத்தாழிகள் மீட்கப்பட்டுள்ளன. வைப்பாறின் ஓரமாகவுள்ள சிவகிரி பனையூர், வாசுதேவ நல்லூர் என்ற கிராமங்களிலும், சித்தாறின் அண்மையிலுள்ள இலஞ்சி.குற்றாலம் பகுதிகளிலும். தாமிரபரணியின் சிவசைலம். அகஸ்தியமரை வெளிகளிலும். 


இதே நதி வந்துசேரும் பாம்பன் கரையோரத்திலும் ஈமத் தாழிகள் வெளிவந்துள்ளன. உலகப் பிரசித்திபெற்ற ஆதிச்ச நல்லூர் ஈமத்தாழிக் கிராமம் பாம்பன் கரையோரத்தில் காணப்படுகிறது.


பாம்பன் கரையோரத்திற்கு நேராக இருக் கும் இலங்கையின் புத்தளம் தொடங்கி மன்னார் வரையிலான வடமேற்கில் பெருமளவு ஈமத்தாழிகள் காணப்படுகின்றன. பாம்பனில் வாழ்ந்தோர் இங்கும் வாழ்ந்தார்கள் என்பதை இது காட்டுகிறது. 


புத்தளத் தின் பொம்பரிப்பில் 8000வரையிலான ஈமத்தாழிகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. வடமராட்சி வல்லி புரப் பகுதியிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வில்பத்து சரணாலயத்திற்கு உட்பட்ட தேக்கம். அளுத்பொம்பை. 


கரம்பன்குளம் பகுதியிலும் பெரு மளவு ஈமத்தாழிகள் புதையுண்டு கிடக்கின்றன. ஆதிச்ச நல்லூருக்கும் பொம்பரிப்புக்கும் இடையில் மிகநெருக்கமான ண்பாட்டுத் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.


யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையில் ஈமத்தாழிகளும் மண்ணில் புதைக்கப்பட்ட உடல் களும் மீட்கப்பட்டுள்ளன. வேலணை சாட்டியில் ஈமத்தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் இரகு பதி குழுவினர் ஆனைக்கோட்டையில் செய்த ஆய்வின்போது 2500 வருட பழைமை வாய்ந்த இரு எலும்புக்கூடுகள் மத ஆசாரங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 


ஒரு எலும்புக்கூட்டின் கைவிரலொன் றில் பிரம்மி எழுத்தில் பொறிக்கப்பட்ட இலச்சினை மோதிரம் வெளிக்கொணரப்பட்டது. யாழ்பல்கலைக் கழக வரலாற்றுத்துறையின் பாதுகாப்பில் இருந்த இந்த மோதிரம் இப்போது காணாமற்போய்விட்டது. 


மோதிரத்திலுள்ள தமிழ் பிரம்மி எழுத்துக்கள் அதுவொரு அரசனுக்குரியது என்ற செய்தியைக் கூறுகின்றன. மோதிரத்தைப்போல் மேற்கூறிய எலும்புக்கூடுகளும் காணாமற்போய்விட்டன.


தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களைப் புதைப்பதற்கு எடுத்த தீர்மானம் எமதினத்தின் முதுபெரும் வரலாற்றை அடியொற்றியது. புதைத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தாது 'விதைத்தல்' என்ற சொல்லையும் உடலுக்கு 'வித்துடல்' என்ற பதத்தையும் நாம் பயன்படுத்துகின்றோம். 


மாவீரர்கள் மீண்டும் எழுவார்கள் அவர்கள் சடப்பொருள் அல்லவென்ற அர்த்தத்தில் விதைத்தல். வித்துடல் என்பவை பயன்படுகின்றன. 11. 12 நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் வீரத்தையும் தேசியத்தையும் உணர்த்தும் பரணி நூல்களில் 'களம்' என்ற நெற் களத்தையும் போர்க்களத்தையும் குறிக்கும் சொல் பயன்பாட்டில் உள்ளது. ஜெயங்கொண்டார் பயிர்த் தொழிலையும் போர்த்தொழிலையும் கலிங்கத்துப் பரணியில் இணைத்துப் பாடியுள்ளார்.


விடுதலைப்போரின் ஆரம்பகட்டத்தில் களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல் எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன. பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் தனி விருப்பத்திற்கு அமைவாகவும் போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வந்தன. 


பொதுமயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வித்துடல்களைப் புதைக்கவேண்டிய கட்டாயதேவை ஏற் பட்டது. 


இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில் தேசியத் தலைவரும் 


அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களைத் தகனம் செய்தால் இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும் புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள் என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள்தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன. 


இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள் ஒரே இடத்தில். அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டுள்ளன. இத் துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.


போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்துத் தாயகம் எடுத்துச்செல்லும் இராணுவப்

பாரம்பரியம் உலகில் உண்டு.


Leave A Comment