குருதிச் சுவடுகள்

லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்!

தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்! 

மிழரின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி போராடப்புறப்பட்ட இளம் வீரன் இரா.பரமதேவா என்கிற மறத்தமிழன் வீரமரணமடைந்து இன்றுடன் 38 வருடங்கள் நிறைவடைகின்றன.

என்றோ ஒரு நாள் இந்த வீரர்களின் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப்புலிகள் இதழில் பரமதேவாவின் வீரச்சாவு நினைவாக வெளியாகிய நினைவுக்குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து அந்த மாவீரனுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம் .


1983 செப்டெம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறான் பரமதேவா .1984 செப்டெம்பர் 22 ந் திகதி களுவாஞ்சிக்குடி போலீஸ் நிலைய தாக்குதலின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைகிறான் பரமதேவா .மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தை புதியதோர் திருப்பமென்றும் ஓராண்டு நினைவு என்றும் சிலர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சரியாக அதற்க்கு முதல்நாள் ஒரு போலீஸ் நிலையத்தின் மீது ஆயுத சன்னதனாய் கெரில்லாத் தாக்குதலை நடத்துகிறான் இந்த வீர மகன் .

ஒரு விடுதலை வீரனின் வாழ்க்கை இப்படித்தான் அமையமுடியும் .தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல் பிரிவு படைத் தளபதியான லெப். இரா.பரமதேவா சிங்கள போலீஸ் கொமாண்டோக்கள் நிறைந்திருந்த களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலுக்கு தலைமை தாங்கினான் .அஞ்சாத நெஞ்சனாக முன்னணியில் நின்று போரிட்ட பரமதேவா களத்திலே வீரமரணம் அடைந்தான் .

பரமதேவா மட்டக்களப்பு மண் சுமந்த வீரமகன் . 28 வயதான பரமதேவா நன்கு பயிற்ரப்பட்ட கெரில்லா போராளியாவார் . 19 வயது மாணவனாக மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் உயர் வகுப்பு மாணவனாக இருந்த காலத்திலிருந்தே சிங்களபேரினவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பரமதேவா துடிப்போடு பங்குகொண்டிருந்தார் .

1975 மே 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா குடியரசு தினத்தை பகிஷ்கரிக்க மாணவர்களை அணிதிரட்டி போராடியமைக்காக பாடசாலையில் இருந்து பரமதேவா நீக்கப்பட்டார் . 1977 ஆம் ஆண்டு மட்டுநகரில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொலிசாரால் தேடப்பட்ட பரமதேவா அந்த இளம் வயதிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டான் . 1978 இல் இயக்க தேவைகளுக்காக செங்கலடி மக்கள்வங்கி பணத்தை பறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா பொலிசாருடன் நடத்திய சண்டையில் கையின் மேற்பாகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டான் .

1981 ஸ்ரீலங்கா அரசு விடுதலை வீரன் பரமதேவாவுக்கு 8 வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது . நீதி மன்றத்தில் கூடி இருந்தோர் குமுறி அழுதபோதும் பரமதேவா எப்போதும்போல சிரித்த முகத்தோடு அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டான் . போகம்பர , வெலிக்கட, நியுமகசின் ,மகர ஆகிய சிறைச்சாலைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா சிங்கள கைதிகள் மத்தியிலும் மரியாதைக்குரியவனாக இருந்திருக்கிறான் .1971 ஆண்டு ஏப்பிரல் கிளர்சியல் ஈடுபட்ட சிங்கள அரசியல் கைதிகளுடன் சிறைச்சாலையில் பயன் மிகுந்த சர்சகைகளை பரமதேவா நடத்தி இருக்கிறன்.

1983 செப்டம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு தமிழ் ஈழ போராளிகள் வெற்றிகமான நடவடிக்களில் பெரும் பங்கு வகுத்தவன் பரமதேவா .சிறையில் இருந்து தப்பியதும் அவன் ஓய்ந்து போய் நின்றுவிடவில்லை தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆயுத போராட்ட பாதையில் மூலமே தமிழ் ஈழ இலட்ச்சியத்தை அடையமுடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட பரமதேவா விரைவிலே தமிழ் ஈழ மண்ணில் தனது கெரில்லா போராட்ட வாழ்க்கையை தொடங்கினான்.

விடுதலைப் புலிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் மீது நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதலில் பரமதேவா முன்னணி வீரனாக நின்று செயல்பட்டான் கொக்கிளாயில் சிங்கள இராணுவத்தின் மீதான கெரில்லாத் தாக்குதலிலும் பரமதேவா முன்நின்றான். என்றும் சிரித்த முகத்தோடு காட்சி தரும் பரமதேவாவின் கூர்மையான அறிவையும் விடுதலைப் போராட்டத்தையும் போர்க்குணத்தையும் மாறுபட்ட விடுதலை இயக்கங்கள் கூட அங்கீகரிக்கின்றன . கிழக்கு மாகாணத்தில் பரமதேவாவின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை .

பரமதேவாவுடன் சேர்ந்து களுவாஞ்சிக்குடிபொலிஸ் தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கெரில்லாப் போராளியும் களத்திலேவீரமரணம்அடைந்தான்.

தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்!
1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.

1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது.

சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன.

ஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.

ஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில் விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும்.

இவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாற்றில் என் எழுதுகோலை ஊன்றுகின்றேன்.

தமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது.

பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.

1984 .09 .22 ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது.

மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.

விடுதலைப் போராளிகளை பெருமையாக மக்கள் மதித்த காலப்பகுதியில் இரகசியமாக இத் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்ட போதும் அர்ப்பணிப்போடு அமைந்ததாக சிலரின் உதவியையும் பெற்று தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகினர். தாக்குதலுக்கான இடமும், காலமும் குறிக்கப்பட்ட நிலையில் போராளிகளும் குழுவாகக் பிரிக்கப்பட்டனர்.

மூன்று குழுக்களாகப் பிரிந்த போராளிகள் சந்திக்கும் இடமாக கிரான்குளம் ஊர் தெரிவு செய்யப்பட்டது. 1984 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் நாள் இரவு குழுக்கள் மூன்றும் பிரிந்து தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் தீர்மானித்தனர். ஒரு குழு தோணி ஒன்றில் மட்டக்களப்பு வாவியில் பயணித்து ஆயுதங்களுடன் கிரான் குளத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இரண்டாவது குழு, மூன்றாவது குழு மிதி வண்டியில் வேறு வேறு பாதைகள் ஊடக பயணித்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அன்று இரவு ஒரு ஆதரவாளரின் தென்னந்தோட்டத்தில் தங்கினர். 22 ம் நாள் பகல் உணவு எடுத்துக்கொண்ட பின் மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கமைய பி. பகல் 3 மணிக்கும் 4 மணிக்குமிடைப்பட்ட வேளையில் கிரான் குளத்திற்கும், குருக்கள் மடத்திற்குமிடையில் அம்பிளாந்துறை சந்திக்கு அருகாமையில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தாக்குதலுக்கு செல்லும் பயணத்தை ஆரம்பித்தனர்.

கல்முனை நெடுஞ்சாலையில் மட்டு நகரிலிருந்து 20 வது மைல்லில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடியில் நிலைகொண்டிருந்த சிங்களக் காவல் துறையின் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அவசர மருத்துவ ஊர்தி உட்பட இரண்டு ஊர்திகள் வழிமறிக்கப்பட்டு அந்த ஊர்திகளில் போராளிகள் அனைவரும் தாக்குதலுக்காகச் சென்றனர்.

இத் தாக்குதலில் அனுபவமிக்க திருமலைத் மாவட்ட தளபதி லெப். கேணல் சந்தோசம், மூதூர்த் தளபதி மேஜர்.கணேஷ், ஆகியோரும் இடம் பெற்றது மேலும் சிறப்பான நிலையில் தாக்குதல் அணி இருந்ததைக் குறிப்பிட முடிகின்றது.

மாவட்டத்தில் தங்கியிருந்து செயல்பட்ட அனைத்து விடுதலைப் புலிப்போரளிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். சரியாக பிற்பகல் 5 .30 மணியளவில் காவல் நிலையத்தினுள் பாய்ந்த விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தபோது, எதிர் பார்த்ததற்கு மாறாக காவல் துறையினரின் விடுதியிலிருந்து போராளிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதனால் களநிலைமை மாறியிருந்தது.

ஏனெனில் போராளிகளுக்கு கிடைத்த தகவலின்படி மாலை 6 மணிக்கு பின்னர்தான் காவல்துறையினர் விடுதிகளுக்குள் திரும்புவார்கள் என்றும் அது வரையில் காவல் நிலையத்தினுள் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் என்பதால் பணி ஒய்வு பெறும் நேரத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆயுதங்களையுப் பெற்று வெற்றியுடன் திரும்பமுடியும் என்பது போராளிகளின் நிலைப்பாடாகும். ஆனால் சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த இச்சண்டையில் லெப்.ராஜா, வீரவேங்கை ரவி அவர்களின் வீரச்சாவுடன் சில போராளிகள் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆயுதம் மாத்திரம் கைப்பற்றப்பட்டு போராளிகள் பின்வாங்கினர்.

இத் தாக்குதலில் எமக்கு ஏற்பட்ட இழப்பு வரலாற்றில் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்து போனது. போராட்ட வரலாற்றில் பிற்பட்ட காலங்களின் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது அறியக் கூடியதாகயிருக்கின்றது. மண்ணின் விடுதலைக்காக மட்டக்களப்பில் எழுந்த தமிழ் தேசிய உணர்வின் அடையாளமான பரமதேவா தாய் மண்ணில் தாக்குதலில் வீழ்ந்தது தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக இருந்தது.

வீரவேங்கை ரவி மகிழடித்தீவு ஊரைச் சேர்ந்தவர். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவனாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அரசியல் வேலையில் உற்சாகமாக செயல்பட்டவர். குடும்பத்தில் மூத்த மகனான வாமதேவன் என்ற ரவிக்கு ஆறு தங்கைகள் சகோதரிகளாக இருந்தனர். இவரின் இழப்பு குடும்பத்திற்கு மாத்திரமில்லாமல் ஊரக உணர்வுள்ள மக்களுக்கும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அன்று இளம் அரசியல் விடுதலைப் போராளி ஒருவரையும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்திருந்தது.

இவர்கள் இருவரின் வீரச்சாவு செய்தியறிந்த மக்கள் எல்லோரும் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த தவிப்போடு துயரம் நிறைந்தவர்களாக காணப்பட்டனர். தமிழர்களுடைய வரலாற்றில் மட்டக்களப்பில் பள்ளிக்கூட பருவத்திலிருந்து விடுதலைக்காக எழுந்த ஓர் உயர்வான போராளியான பரமதேவாவை ,ழந்து தாய் மண் தவித்தது. மட்டக்களப்பின் முதல் விடுதலைப் போராளியாக களமிறங்கிய வரலாற்று நாயகனின் சிந்தனைகள், செயல்பாடுகள் விடுதலைப் போராளிகளுக்குப் பாடமாக அமையப்பெற்றிருந்தன.

ஒவ்வொரு தமிழரும் வாழும்வரை போராளியாக வாழ்வதென்பது வரலாற்றில் எமது விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். இந்த உறுதிதான் எமக்குத் தேவையாகும். இதைவிடுத்து விவேகமற்ற விமர்சனத்தை முன் வைப்பவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து பின்வாங்கி தம்மை அர்பணித்து தாய் மண்ணில் வீழ்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவேண்டும்.

பணத்தாசை பிடித்து, ஆக்கிரமிப்பு வாதிகளின் பண உதவியுடன், பித்தலாட்டம் போட்டு, இணையதளம் நடத்துபவர்கள், போராளிகளை போற்றா விட்டாலும், தூற்றாமல் விலகிக் கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும்.

போற்றுவதற்கும், தூற்றுவதற்குமான தகுதியை இழந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய விரோதிகள் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை அரங்கிலிருந்து வெளியேறி, ஒதுங்கி வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் தமிழ் உணர்வாளர்கள் இருக்கின்றனர்.

பரமதேவாவின் தமிழ் உணர்வு, விடுதலை பெற்றவர்களாக தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற நிலையில் உயர்ந்து நின்றபோது இளவயதில் மாணவ பருவத்தில் இன விடுதலை வீரனாக மட்டக்களப்பில் பரமதேவாவைக் காணமுடிந்தது.

விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி, எழுச்சியில் வரலாறு தேட முற்படுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் ஆயுதப் போராட்டம் மட்டக்களப்பின் விடுதலைப் புரட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டு எழுத வேண்டிய நிலையுமுள்ளது. போராளியின் புனிதப் பயணம் என்பது இலட்சியத்தின் எல்லையில்தான் முடிவடையும்.

தடைகளையும் தன்னல மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு தடம் புரண்டு திரும்புவது போராளி என்ற நிலையிலிருந்து மாறிவிடும். இலட்சியத்தை நோக்கிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சிங்களப் பாராளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடும் நிலையில் போராட்டம் மாறியிருக்கின்ற இவ்வேளையில் புரட்சிவாதிகளையும், புனிதப் போராளிகளையும் எமது மக்களுக்கு இனங்காட்டி வருகிறோம்.


Leave A Comment