நீ எங்களை சுமந்தாய். தமிழின் தலைமகனே,
எங்களுக்கு மட்டுமல்ல உலகின்எந்த இனத்துக்கும் இப்படியான ஒரு
தலைவன் கிடைக்க மாட்டான்’
ஒவ்வொரு தந்தையர் தினத்திலும்
அப்பாவின் நினைவுகள் அலைமோதினாலும்- கூடவே
அண்ணனே உன் நினைவும்
எப்படியோ வந்து சேர்ந்துவிடுகிறது..
மீசை அரும்பும் வயதில்
உன்னிடம் வந்து சேர்ந்தோம்.
இன்று உலகின் நிகழ்வு ஒவ்வொன்றையும்
எப்படி பார்க்க வேணும் என்ற பார்வை நீ
உன் தோள்மீது எங்களை தூக்கி
வைத்து நீ காட்டியதுதானே தலைவா.
கூட்ட நெரிசல் நிறை
தேர் திருவிழா ஒன்றில் தன்
தோள்மீது தூக்கி வைத்து
காட்டும் தந்தையின் பரிவை போலவே
நீ எங்களை சுமந்தாய்.
தமிழின் தலைமகனே, நீ எமக்கு
வெறுமனே . கைத்துப்பாக்கியின்
தோட்டா பாயும் திசை மட்டும்
சொல்லி தரவில்லை.
எம் இருப்பிடம் வரும்போதெல்லாம்
உன் கையில் ஏதேனும் புத்தகங்கள்
இருந்தே நான் பார்த்திருக்கேன்.
சொக்கலிங்கம் மொழிபெயர்த்திருந்த
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
எண்ணூறு பக்க புத்தகத்தை காவிவந்து
நீ எம்மை படிக்க சொன்னபோது
அந்த வயதில் உன்மீது இனம்புரியா
கோபம் வந்ததென்னவோ உண்மைதான்.
உனக்கு தெரியும் நாங்கள்
ஏதோ ஒரு சாகச எண்ணத்துடனேயே
உன்னிடம் வந்துள்ளோம் என.
அதனை இலட்சிய எண்ணமாக
மாற்ற நீ உழைத்த உழைப்பு
மிகப் பெரிது அண்ணா.
ஒருநாள் நீ வரும்போது
உன் கையில் அம்புலிமாமா..
எமக்கோ ஆச்சரியத்தின் உச்சம்.
பொன்னியின் செல்வiனின்
பழுவேட்டையரை சொல்லிதந்துவிட்டு
டால்ஸ்டாயின் ரஸ்ய இளவரசனை
படிக்க தந்துவிட்டு
இதென்ன அம்புலிமாமா என.
நீ அமைதியாக சொன்னாய்
அப்போதுதான் புதிதாக வந்திருந்த
ஒரு போராளியின் பெயர் சொல்லி
அவனுக்கு முதலில் கடினமான
ஒன்றை கொடுக்க கூடாது
முதல்லை அம்புலிமாமா பிறகு
படிப்படியா மற்றது என.
தினமும் நம்மை சுற்றி
நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும்
இப்படித்தான் பார் என்று
புதிய ஒரு கோணத்தை உன்னிடமே
கற்றோம் தேசியதலைவனே,
எமக்கு காய்ச்சல் வந்த பொழுதெல்லாம்
பக்கத்தில் இருந்து “மகனுக்கு என்ன செய்யிது”
என கேட்டு எல்லாம்தான் நீ செய்தாய்..
முந்தா நாள் உன் வரலாறு தெரிந்த
ஒரு குர்தீஸ்காரன் சொன்னான்
‘ உங்கள் இனத்துக்கு கிடைத்த நல்ல தலைவன் ‘ என.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
‘ எங்களுக்கு மட்டுமல்ல உலகின்
எந்த இனத்துக்கும் இப்படியான ஒரு
தலைவன் கிடைக்க மாட்டான்’ என!! – –
– ச.ச.முத்து –
Leave A Comment